சொர்க்கத்தில் நுழைவிக்கும் லாயிலாஹ இல்லல்லாஹ்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஆதி முதல் அந்தம் வரை வாழ்ந்த) இறைநம்பிக்கையாளர்கள் அனைவரையும் அப்படியே மறுமை நாளில் அல்லாஹ் ஒன்று திரட்டுவான். அப்போது அவர்கள் (நமக்கு ஏற்பட்டுள்ள) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து நம்மை விடுவிக்க நாம் (யார் மூலமாவது) நம் இறைவனிடம் மன்றாடினால் (மிகவும் நன்றாயிரக்கும்) என்று பேசிக்கொள்வார்கள்.

பிறகு அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று,

ஆதம் (அலை) அவர்களே! மக்களை(ச் சூழ்ந்துள்ள இக்கட்டான சூழந்நிலையை) நீங்கள் காணவில்லையா? அல்லாஹ் தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். (எனவே) இந்த(ச் சோதனையான)க் கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள் என்று சொல்வார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை மக்களிடம் கூறுவார்கள். ஆகவே, நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்களில் முதலாமவர் ஆவார் என்று கூறுவார்கள்.

உடனே, நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அப்போது அன்னாரும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை அவர்களிடம் கூறுவார்கள். பிறகு, நீங்கள் அளவற்ற அருளாள(ன் இறைவ)னின் உற்ற நண்பர் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே இறைநம்பிக்கையாளர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவறுகளை மக்களிடம் கூறுவார்கள். பிறகு, அல்லாஹ் தவ்ராத் (வேதத்)தை அளித்து, உரையாடவும் செய்த அடியாரான மூசாவிடம் நீஙகள் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே இறைநம்பிக்கையாளர்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை என்று கூறிவிட்டுத் தாம் புரிந்த தவற்றை அவர்களும் மக்களிடம் சொல்வார்கள். பிறகு, நீங்கள் அல்லாஹவின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே அவர்கள் ஈசா (அலை) அவர்களிடம் செல்வார்கள்.

அப்போது அவர்களும், (நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை, ஆகவே நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள் என்று சொல்வார்கள்.

உடனே இறைநம்பிக்கையாளர்கள் என்னிடம் வருவார்கள்.

அப்போது நான் என்னுடைய இறைவனிடத்தில் (பரிந்துரை செய்ய) அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அதற்கான அனுமதி எனக்கு வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது அவனுக்கு (சிரம்பணிந்து) சஜ்தாவில் விழுவேன். தான் நாடிய வரை அல்லாஹ் (அப்படியே) என்னை (சிரவணக்கத்தில்) விட்டுவிடுவான்.

பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) முஹம்மதே! தலையை உயர்த்துஙகள்! சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள் உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று என்னிடம் சொல்லப்படும்.

அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ் மொழிகளைக் கூறி போற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன்.

அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு நான் அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன்.

பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) செல்வேன் என் இறைவனைக் காணும்போது நான் (முன்போலவே, சிரம் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். அப்போது அல்லாஹ் தான் நாடிய வரை என்னை (அப்படியே சிர வணக்கத்தில்) விட்டுவிடுவான்.

பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து), முஹம்மதே! தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள், செவியேற்கப்படும். கேளுங்கள், அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள், உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் என்று சொல்லப்படும்.

அப்போது நான் என் இறைவனை அவன் எனக்குக் கற்றுத்தந்த புகழ்மொழிகளைக் கூறிபோற்றுவேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன்.

அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான்.

பிறகு (அவர்களுக்காகப் பரிந்துபேசி) அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன்.

பிறகு) மூன்றாம் முறையாக) நான் (இறைவனிடம்) செல்வேன்.

அப்போது நான், என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை என்று சொல்வேன்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“யார் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை) என்று கூறியதுடன் அவரது உள்ளத்தில் ஓர் வாற்கோதுமை எடையளவு நன்மையிருக்குமோ அவர் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.”

பிறகு

“யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியதுடன் அவரது உள்ளத்தில் மணிக் கோதுமையின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.”

பிறகு

“யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியதுடன், அவரது உள்ளத்தில் கடுகின் எடையளவு நன்மை இருக்குமோ அவரும் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.”

இதை அனஸ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆதாரம்: புகாரி)

குறிப்பு:

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை வெறுமனே வாயால் மொழிந்துவிட்டு அந்த திருக்கலிமாவிற்கு முரணானவற்றை செய்வதனால் அவர் உண்மையிலேயே அந்தக் கலிமாவை ஏற்றுக்கொண்டவராக மாட்டார்!

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துக்கொண்டு அதை முறைப்படி உள்ளத்தால் ஏற்று அதை செயலால் நிறைவேற்ற வேண்டும்!

லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற திருக்கலிமாவை முறைப்படி அறிந்து அதை உளமாற கூறுவதற்கு அதன் விளக்கங்களை பின்வரும் வீடியோக்கின் லிங்கை கிளிக்செய்து அவற்றைக் கேட்டுப் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *