மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்

திருகுர்ஆனை படித்து மார்க்க அறிவைப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் மீதும் கடமை என்று திரு குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஹதீஸ்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் திருமறை வசனங்கள் அனைத்தும் முஸ்லிமான ஒருவர் அல்-குர்ஆனின் வசனங்களைப் படித்து அதன் போதனைகளை உள்வாங்கி சிந்தித்து மார்க்க அறிவைப் பெற வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்துகின்றன:

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது” (அல்-குர்ஆன் 2:185)

“எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.” (அல்-குர்ஆன் 2:174)

“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.” (அல்-குர்ஆன் 2:159)

“அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.” (அல்-குர்ஆன் 44:58)

“ஹா மீம்; விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.” (அல்-குர்ஆன் 43:1-3)

“அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.” (அல்-குர்ஆன் 12:1-2)

“மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.” (அல்-குர்ஆன் 16:89)

“அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது; அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை.” (அல்-குர்ஆன் 41:2-4)

“தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்).” (அல்-குர்ஆன் 18:1-3)

” (நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.” (அல்-குர்ஆன் 43:43-44)

பின்வரும் நபிமொழிகளும் முஃமினான ஒருவர் மார்க்க கல்வியைக் கற்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகின்றன:

“மார்க்க அறிவைப் பெறுவது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீதும் கடமை” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 218)

“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான். யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான். யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான். அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான்.”

“யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக்கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக்கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள்மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் சூழ்ந்துக்கொள்கின்றது! அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான்.

அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.” இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஹதீஸ் எண்: 6518)

“இரவு முழுவதையும் தொழுகையில் கழிப்பதை விட, இரவில் ஒரு மணிநேரம் கூடி (மார்க்க) அறிவைப் பெறுவது சிறந்தது” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: (திர்மிதீ, ஹதீஸ் எண் 256)

“மார்க்க அறிவைத் தேடிச் செல்பவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் (அர்ப்பணிப்புடன்) இருக்கிறார்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 220)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (முஸ்லிம்களின்) இரண்டு குழுக்களைக் கடந்து செல்ல நேர்ந்தது. அவர்கள் கூறினார்கள்:

“இருவரும் நல்லவர்கள், ஆனால் ஒன்று மற்றொன்றை விட உயர்ந்தது. ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்விடம் துஆ செய்து பிரார்த்தனை செய்கிறார்கள். அவன் விரும்பினால், அவன் அவர்களுக்கு வழங்குவான்! அவன் விரும்பினால், அவன் (வழங்குவதை) நிறுத்தி வைத்துக்கொள்வான்! மார்க்கம் பற்றிய புரிதலையும் அதன் அறிவையும் பெற்று, அறியாதவர்களுக்குப் போதிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், அவர்களைவிட உயர்ந்தவர்கள். நிச்சயமாக நான் ஆசிரியராக அனுப்பப்பட்டேன்.” என்று கூறிவிட்டு அவர்களிடையே அமர்ந்தார். (திர்மிதீ, ஹதீஸ் எண் 257)

ஆகையால் தான், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ‘ஒரு முஸ்லிம் மார்க்க கல்வியைக் கற்பது கட்டாயக் கடமை’ என்பதில் ஏகோபித்த கருத்தில் கூறுகின்றனர்!

எனவே, ஒரு முஸ்லிமின் உண்மையான வெற்றியாகிய சொர்க்கம் செல்லும் வழியாகிய மார்க்க அறிவைப் பெறுவதில் நாம் அதிக முனைப்புக் காட்டி நமக்கு கிடைக்கும் சொற்ப நேரங்களைக் கூட பொழுது போக்குகளில் வீணடிக்காமல் திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றைப் தொடர்ந்துப் படித்து நமது மார்க்க அறிவைப் பெருக்கிக் கொள்வது மிக மிக அவசியமானதாகும்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *