அமானிதம் பேணுவதன் அவசியம்

அமானிதப் பொறுப்பேற்பது சாதாரண விசயமல்ல! பொருப்பேற்றுக்கொண்டால் அதைப் பேணிப் பாதுகாப்பது மிக அவசியம்!

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும், மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து கொள்ளுமாறு எடுத்துக் காட்டினோம்; ஆனால் அதைச் சுமந்து கொள்ள மறுத்தன;அதைப் பற்றி அவை அஞ்சின;ஆனால் மனிதன் அதைச் சுமந்தான்;நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம் செய்பவனாகவும், அறிவிலியாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன்33:72)

அமானிதமாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொருட்களைத் திருப்பித் தரவேண்டும் என்பது இறைக்கட்டளை!

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன்4:58)

கடனுக்கு அடமானமாகக் கொடுத்த அமானிதப் பொருட்களையும் முறையாகத் திருப்பி தரவேண்டியதன் அவசியம்!

“இன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு பொருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்பட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்; அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் – எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது – இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.” (அல்-குர்ஆன் 2:283)

அமானிதப் பொருட்களைத் திருப்பித் தராமலிருப்பது நம்பிக்கை மோசடியாகும்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நிச்சயமாக உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.” 

அமானித மோசடிக்கும் முனாஃபிக் தனத்திற்கும் உள்ள உறவு!

நபிகள் நாயகம் கூறினார்கள்:

“நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று: பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறுசெய்வான், நம்பிக்கை வைத்தால் மோசடி செய்வான்.”

(நூல்:புகாரி)

பொறுப்பு ஓர் அமானிதம்:

“அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் என்னை (ஏதாவது) பணியில் அமர்த்தக் கூடாதா?” என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் எனது தோள்பட்டையில் அடித்துவிட்டு, ‘‘அபூதர்ரே! நீர் பலவீனமானவர். அதுவோ அமானிதம். யார் அதை கையாள வேண்டிய முறைப்படி கையாண்டு தன் மீதுள்ள கடமையை நிறைவேற்றுகிறாரோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) மறுமை நாளில் அது இழிவாகவும் கைசேதமாகவும் இருக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ர­லி) நூல்: புகாரி (2651)

மக்களிடத்திலிருந்து அமானிதம் அகற்றப்படுவது குறித்த நபி (ஸல்) அவர்களின் முன்னெச்சரிக்கைகள்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“விரைவில் ஒரு காலம் வரும். அப்போது மக்களில் சிறந்தவர்கள் (இந்த உலகை விட்டும்) அகற்றப்பட்டு இழிவானவர்கள் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களுடைய உடன்படிக்கைகளும் அமானிதங்களும் (அவர்களின் அக்கரையின்மையால்) சீர்கெட்டு, கருத்து வேறுபாடும் கொள்வார்கள்” 

என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் தம்முடைய விரல்களைக் கோர்த்து, 

“அவர்கள் இவ்வாறு (நல்லவருக்கும் தீயவருக்கும் வித்தியாசம் இல்லாமல்) இருப்பார்கள்” 

என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 

“நீங்கள் (எதை உண்மை என்று) அறிந்துள்ளீர்களோ அதை எடுத்துக் கொண்டு, (எதை பொய்யென்று) மறுக்கிறீர்களோ அதை விட்டு விடுங்கள். பொதுமக்களின் காரியங்களை விட்டு விட்டு உங்களுக்கு நெருங்கியவர்களின் விஷயத்தில் ஈடுபடுங்கள்.” 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ர­லி) நூல்: அபூதாவூத் (3779)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (அமானத் எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனி­ருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு சுன்னாவி­ருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய) இதை நான் பார்த்து விட்டேன்.

இரண்டாவது செய்தி நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒருமுறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்தி­ருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து (அது அகற்றப்பட்டதன்) அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒருமுறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முத­ல் நம்பகத்தன்மை என்னும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டு பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவது) கா­ல் தீக்கங்கை உருட்டி விட்டு அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பி பெரிதாகத் தெரியுமே தவிர அதனும் ஒன்றும் இருக்காது.

பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். ”இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார்” என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் அரிதாகி விடுவார்கள்). மேலும் ஒருவரைப் பற்றி ”அவருடைய அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? அவருடைய வீரம் தான் என்ன?” என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால் அந்த மனிதருடைய உள்ளத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது. 

அறிவிப்பவர்: ஹுதைஃபா (ர­லி) நூல்: புகாரி (6497)

ஒருவரிடம் வாங்கிய கடனும் கூட அமானிதமே! அந்தக் கடனை திருப்பித் தராமலிருப்பதும் அமானித மோசடியே!

கடன் வாங்கியவர் அதைத் திருப்பித் தராமல் மரணித்தால் அந்த ஜனாஸாவிற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை வைக்கக் கூட தயங்கிய அளவிற்கு மோசமான செயல் தான் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் அமானித மோசடி செய்வது!

தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, நபித்தோழர்கள், இல்லை என்றனர். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. “இவர் கடனாளியா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள், ஆம் என்றனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றார்கள். அப்போது அபூகதாதா (ர­லி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு!” என்று கூறியதும் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். 

அறிவிப்பவர்: ஸலமா (ர­லி) நூல்: புகாரி (2295)

அமானிதங்கள் பாழ்படுத்தப்படுவது மறுமை நாள் நெருங்குவதற்கான அடையாளமாகும்!

ஒரு அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்த சமயம் அவர்களிடம் நாட்டுப்புறத்து அரபி ஒருவர் வந்தார். “மறுமை நாள் எப்போது?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதை செவியுற்றனர், எனினும் அவரது இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை” என்றனர். வேறு சிலர், “அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை” என்றனர். 

முடிவாக நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துக் கொண்டு, “மறுமை நாளைப் பற்றிக் கேட்டவர் எங்கே?” என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்) “அல்லாஹ்வின் தூதரே, இதோ நான் தான்” என்றார். அப்போது “அமானிதம் பாழ்படுத்தப் பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பார்க்கலாம்” என்று கூறினார்கள். அதற்கவர், “அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?” எனக் கேட்டார். அதற்கு, “எந்தக் காரியமாயினும் அது தகுதி அற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி (59)

அமானிதப் பேணுதல்களில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அக்கரை!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பெருமை, மோசடி மற்றும் கடன் ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் உடம்பை விட்டும் உயிர் பிரியுமானால் அது சொர்க்கத்தில் நுழைந்துவிடும்” என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: சவ்பான் (ர­லி) நூல்: இப்னுமாஜா (2403)

“என்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். “அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒருவரை வழியனுப்பும் போது) “உங்களுடைய மார்க்கத்தையும் அமானிதத்தையும் இறுதி செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்” என்று கூறுவார்கள். 

அறிவிப்பவர்: சா­ம் பின் அப்தில்லாஹ் நூல்: அஹ்மத் (4295)

தொடர்புடைய பதிவுகள்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *