நிச்சயமான நியாயத் தீர்ப்பு நாள்

பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்று ஒன்றிருக்கும். ஆக்கம் என்று ஒன்றிருந்தால் அதற்கு அழிவு என்று ஒன்றிருக்கும்! அதுபோல் இறைவனின் படைப்பாகிய இவ்வுலகிற்கும் அழிவு என்பது நிச்சயம். இது இறைவன் விதித்த நியதிகளில் நின்றும் உள்ளது.

அகில உலகத்தையும் படைத்த ஏக இறைவன் அவனால் படைக்கப்பட்ட மனித இனம் மீட்சி பெறுவதற்காக அவ்வப்போது பற்பல தூதர்களை அனுப்பி வைத்தான். அந்த தூதரின் சமுதாய மக்களுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை விளக்குவதற்காக அந்த தூதர்களுக்கு வேதங்களையும் இறக்கி வைத்தான். ஒவ்வொரு இறைத் தூதரின் சமுதாயத்தினர்களிலும் அவரைப் பின்பற்றியவர்களும் உண்டு. அந்த இறைத்தூதர்களை நிராகரித்தவர்களும் உண்டு. அவ்வாறு நிராகரித்தவர்களுக்கு அவ்வப்போது இறைவன் தண்டணைகளையும் வேதனைகளையும் இறக்கி வைத்ததும் உண்டு.அந்த இறைத் தூதர்களின் இறுதி முத்திரையாக வந்தவர் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்களாவார்.

இந்த இறுதி தூதர் (ஸல்) ருக்கு இறைவன் அருளிய இறுதி வேதத்திலே இவ்வுலக முடிவு நாள் வரை தோன்றக் கூடிய மனித குலம் முழுமைக்கும் தேவையான வாழ்வியல் நெறிமுறைகளையும், இறைவனின் வேதங்களைப் பின்பற்றாத இறைதூதர்களின் சமுதாய மக்கள் இறைவனால் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்ற எச்சரிக்கைகளையும், இந்த உலகம் தோன்றிய விதம் மற்றும் இந்த உலகம் எவ்வாறு முற்றுப் பெறும் என்பதையும் விளக்கி கூறுகிறான்.

இறைவனால் நிச்சயிக்கப்பட்ட நியாயத் தீர்ப்பு நாளை பொய்ப்பித்தவர்கள் அடைந்த தண்டணைகள்: –

இறைவனைப் மறுத்து அவனது நியாயத் தீர்ப்பு நாளைப் பொய்ப்பித்த முன்வாழ்ந்த சமுதாயங்களான ஸமூது, ஆது கூட்டத்தார்கள், இறை தூதர் மோஸஸ் அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஃபெரோ (ஃபிர்அவ்னின்) கூட்டத்தார்கள் மற்றும் இறைத் தூதர் நோவா (நூஹ் அலை) அவர்களின் காலத்தவர்கள் அடைந்த தண்டனைகளை இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

“நிச்சயமானது. நிச்சயமானது எது? அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது? ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர். எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?

அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர். அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்;ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம். அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்). (அல்-குர்ஆன் 69:1-12)

இவ்வுலகத்தின் அழிவு: –

இவ்வுலகம் அழிவுறும் போது ஏற்படும் பாபெரும் நிகழ்வுகளை இறைவன் பட்டியலிடுகிறான்.

“எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது: இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் – அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும். வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும். இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். (அல்-குர்ஆன் 69:13-17)

“பூமி பெரும் அதிர்ச்சியாக – அதிர்ச்சி அடையும் போது- இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது- அதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது- அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும். (அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால். அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்-குர்ஆன் 99:1-8)

“வானம் பிளந்து விடும்போது- நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது- கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது, மண்ணறைகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்” (அல்-குர்ஆன் 82:1-5)

நிச்சயிக்கப்பட்ட நியாயத் தீர்ப்பு நாள்!

இவ்வுலகில் மனிதர்களின் அனைத்துச் செயல்களும் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர்களின் மூலம் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இறைவன் கூறுகிறான்: –

“கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:18)

இவ்வாறு வானவர்களால் எழுதிவைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனின் பட்டோலைகளும் நியாயத் தீர்ப்பு நாளில் அவரவர் வசமே கொடுக்கப்படும். இவ்வுலகில் நற்கருமங்களைச் செய்தவர்களின் பட்டியல் அவர்களின் வலது கரங்களிலும் தீய செயல்கள் புரிந்தவர்களின் பட்டியல் அவர்களின் இடது கரங்களிலும் வழங்கப்படும். அப்போது அதில் அவன் இவ்வுலகில் செய்த மற்றும் கூறிய அனைத்தும் ஒன்றுவிடாமல் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைவான். அதைப் பற்றி இறைவன் கூறும் போது: –

பட்டோலை வலது கரத்தில் வழங்கப்பெற்றோர்: –

“(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ‘இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்’ எனக் கூறுவார். ‘நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.’ ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் – உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும். ‘சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்’ (என அவர்களுக்குக் கூறப்படும்)” (அல்-குர்ஆன் 69:18-24)

பட்டோலை இடது கரத்தில் வழங்கப்பெற்றோர்: –

“ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: ‘என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! ‘அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- ‘(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? ‘என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! ‘என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!’ (என்று அரற்றுவான்). (அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள். பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்’ (என்று உத்தரவிடப்படும்). (அல்-குர்ஆன் 69:25-32)

இறைவனின் தண்டனைக்கான காரணங்கள்!

“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான். அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை. எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை. சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை. குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.” (அல்-குர்ஆன் 69:33-37)

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *