ஒரு குடும்பத்திற்கு எத்தனை குர்பானி ஆடுகள்?

ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்காகவும் தனித்தனியாக ஒவ்வொரு ஆட்டைக் குர்பானி கொடுக்க வேண்டுமா? அல்லது அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானி கொடுத்தால் போதுமானதா?

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது? என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ‘ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பார்கள். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து நீர் பார்க்கக்கூடிய இந்த நிலை ஏற்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்; நூல்கள்: திர்மிதீ, இப்னுமாஜா (3147), தப்ரானீ.

மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில், ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்தினர்களுக்காகவும் ஒரு ஆட்டைக் குர்பானிக் கொடுத்தால் போதுமானது.

அதே சமயம், அவர் விரும்பினால் எத்தனை வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம். அதற்கு இஸ்லாத்தில் தடை ஏதுமில்லை!

அலீ (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.

பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.”

ஆதாரம்: புகாரி 1718.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் விளங்குவது என்னவென்றால்,

1) ஒருவர் தனக்காகவும் மற்றும் தனது குடும்பத்தினர்களுக்காகவும் ஒரு ஆட்டையோ அல்லது மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

2) குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

3) மாடு அல்லது ஒட்டகமாக இருந்தால் ஏழு குடும்பங்கள் கூட்டுச் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒரு ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.

4) வசதியுள்ள ஒருவர் தனக்கும் தனது குடும்பத்திற்காகவும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகளையோ அல்லது மாடுகளையோ அல்லது ஒட்டகங்களையோ குர்பானி கொடுக்க விரும்பினால் தாராளமாக கொடுக்கலாம்.

5) ஒரு குடும்பத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் குர்பானி கொடுக்க விரும்புவர், அவைகள் பெருமைக்காகவோ வீண் ஆடம்பரத்திற்காகவோ அல்லாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியும் ஏழைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யவதற்காகவும் என்ற நிய்யத்தில் குர்பானிக் கொடுக்க வேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *