இஸ்லாமியப் பார்வையில் கடன் வாங்குவது

பொதுவாகவே கடன் என்பது சாதாரண மனிதர்கள் முதல் ஒரு நாட்டின் அரசாங்கம் வரை அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. கடனின்றி வாழ்பவர்கள் என்பது அரிது என்று கூறுமளவிற்கு கூட நமது வாழ்வில் அது இருக்கிறது.

ஆயினும், பலர் இந்த கடனில் சிக்காமல் தங்களது சரியான பொருளாதாரத் திட்டமிடலின் மூலம் செலவினங்களை முறையாகக் கட்டுக்குள் வைத்து வாழ்கின்றனர். இஸ்லாத்தைப் பொருத்தவரை கடன் வாங்குவதற்கு தடை இல்லையெனினும் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது!

ஒருவர் தனது தேவைக்காக கடன் பெறும் போது வட்டியுடன் தொடர்பு இல்லாதவாறு பார்த்துக் கொள்வது மிக அவசியம்! முஸ்லிம்களில் பலர் சறுக்கி வீழ்வது இங்கு தான்! இன்னும் பலர், நான் வட்டி வாங்குவதில்லையே! நான் வாங்கியக் கடனுக்குத் தானே வட்டி கொடுக்கின்றேன் என்ற வியாக்கியானம் வேறு கொடுப்பர்.

ஆனால், வட்டியுடன் தொடர்புடையவர் அனைவரும் குற்றத்தில் சமமானவர்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள்.

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

எனவே, வட்டி வாங்கியவன் எப்படி குற்றவாளியாகின்றானோ அது போலவே வட்டியைக் கொடுப்பவனும் அந்தக் குற்றத்தில் சரிசமமாகப் பங்கு வகித்துக் குற்றவாளியாகின்றான் என்பதை உணர்ந்து வட்டிக்கு கடன் வாங்குவதை விட்டும் தவிர்ந்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர், நிர்பந்தத்தில் வட்டிக்கு கடன் வாங்கலாம் தானே என்று கேட்பர்! எது நிர்பந்தம் என்பதை அறியாததன் காரணமாகவே அவ்வாறு கேட்கின்றனர். ஆடம்பரமாக வாழ்வதற்கு வசதியான வீடுகளைக் கட்டுவதையும், வீதிகளில் பவனிவர சொகுசுக் கார்களை வாங்குவதையும் கூட அந்த “நிர்பந்தத்” தேவைகளில் சேர்த்து விடுகின்றனர்.

கல்வி, திருமணம் போன்ற அத்தியாவசியத் தேவைகளாக இருந்தாலும் கூட சிக்கனம் அல்லது வேறு மாற்று வழிகளைப் பற்றிச் சிந்திக்க மனமில்லாமல் எளிதில் பணம் கிடைக்கும் வழிகளைப் பற்றி மட்டுமே சிந்திப்பதன் விளைவு தான் இது போன்ற சப்பைக் காரணங்கள்!

வட்டி என்பது இறைவன் தடை செய்த ஒன்று என்றும் அது தடை என்று தெரிந்தும் அதனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புபவர் இறைவனுடன் போர் பிரகடனம் செய்கின்றான் என்பதை உணர வேண்டும்!

இன்னும் சிலர், வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்து உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ கடன் வாங்குவர். அவ்வாறு கடன் பெற்றவர்கள் அந்த பணம் தங்களுடையது அல்ல என்பதையும் அது அவசியம் திருப்பி ஒப்படைக்கப்பட வேண்டிய ஒரு அமானிதம் என்பதையும் மறந்து விடுகின்றனர்.

இன்னும் சிலருக்கு, கடனைத் திருப்பித் தரக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் கூட கடன் கொடுத்தவர் வசதியாகத் தானே இருக்கிறார்! பிறகு கொடுத்துக் கொள்ளலாம் என்று இழுத்தடித்துக் கொண்டே இருப்பர்! பின்னர், அவர்களிடம் சரியான பொருளாதாரத் திட்டமிடல் இல்லாத காரணத்தால் மீண்டும் கடனில் மூழ்கி, முன்னர் வாங்கிய கடனைக் கூட திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு மீண்டும் செல்வர்!

கடன் கொடுத்தவர் கடனைத் திருப்பிக் கேட்கும் போது பல நேரங்களில், கடன்பெற்றவர் பொய்யுரைக்கும் சூழ்நிலைக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். கடன் வாங்குவதால் ஏற்படும் தீமைகளில் இவைகளும் மிகப்பெரியதாக இருக்கின்றது. இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் கடனிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள்.

நபி (ஸல்) அவர்கள்,

“அல்லாஹ்வே பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்று தொழுகையில் துஆ செய்து கொண்டிருந்தார்கள், அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அதிகமாக கடனிலிருந்து பாதுகாவல் தேடுகிறீர்களே! என்றார். அதற்க்கு நபியவர்கள், ஒரு மனிதன் கடன்பட்டுவிட்டால் பொய் பேசவும், வாக்குறுதிக்கு மாறு செய்யவும் ஆரம்பித்துவிடுகிறான்” என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 2397

அடுத்து, கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருப்பது எந்த அளவிற்கு பாரதூரமானது என்பதை கடன் வாங்கிவிட்டு அலட்சியமாக இருப்பவர்கள் உணர வேண்டும்!

கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் ஒருவர் மரணித்தால் அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மாட்டார்கள்!

நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஒரு ஜனாஸா கொண்டுவரப்பட்டபோது, “அவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அதற்கு “இல்லை” என்று பதிலளிக்கப்பட்டது. அடுத்து “அவர் மீது கடன் உள்ளதா?” என்று கேட்டதற்கு “ஆம்” என்று சொல்லப்பட்டது. உடனே நபியவர்கள் “உங்கள் தோழருக்கு நீங்களே தொழுது கொள்ளுங்கள்” என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி), “அவர் கடனுக்கு நான் பொறுப்பு, நீங்கள் தொழுகை நடத்துங்கள்” என்றதும் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நூல்: புகாரி 2289

கடனாளிக்கு நபி (ஸல்) தொழுவிக்க மறுக்கிறார்கள் எனில் கடனைத் திருப்பி செலுத்தாமல் இருப்பது எத்தகைய மோசமான செயல் என்பதை உணர வேண்டும்!

அடுத்து, ஒருவர் இவ்வுலகில் வாழும் போது எவ்வளவு தான் நல்லறங்கள் செய்திருந்தாலும், ஏன் இஸ்லாத்திற்காக தன் உயிரையே அர்ப்பணித்திருந்தாலும் அவர் வாங்கியக் கடனைத் திருப்பிச்செலுத்தாமல் மரணித்திருந்தால் அவர் சொர்க்கம் செல்ல அவர் வாங்கிய அந்தக் கடனே தடையாக அமையும் என்பதை பின்வரும் நபிமொழி எச்சரிக்கின்றது!

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் பொறுமையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (எதிரிகளை) முன்னோகியவாறும் புறமுதுகு காட்டாமலும் அல்லாஹ்வின் வழியில் போரிட்டுக் கொல்லப்பட்டால் என் தவறுகளெல்லாம் மன்னிக்கப்படுமல்லவா? என்று கேட்டார்.

அதற்க்கு ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். நபியவர்கள், அம்மனிதர் திரும்பிச் செல்கையில் அவரை அழைத்து, மீண்டும் அவரது கேள்வியைக் கேட்கும்படி கூறினார்கள். முன்பு கேட்டதையே அவர் மீண்டும் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஆம் கடனைத் தவிர! இவ்வாறு ஜிப்ரீல் எனிடம் இப்போது கூறினார்கள்” என்றார்கள். நூல்கள்: நஸஈ 3156.

ஒவ்வொரு முஸ்லிமின் குறிக்கோளும் மறுமையில் சொர்க்கம் செல்வதே! அந்த சொர்க்கம் செல்வதற்குத் தடையாக இருப்பது வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் மரணிப்பது என்பதை நாம் அவசியம் உணர வேண்டும்.

கடன் வாங்குவதற்கு அவசியம் ஏற்பட்டால், அந்தக் கடனிற்கு ஈடாக திருப்பிக் கொடுக்கும் அளவிற்கு நம்மிடம் பொருள்கள் இருப்பதை உறுதி செய்து, நாம் மரணித்தால் நம் சார்பாக அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த பொருப்பாளரையும் நியமிக்க வேண்டும்.

ஆயினும், நம்மால் இயன்ற வரை கடன் வாங்காமல் இருக்கவே முயற்சிக்க வேண்டும். அதற்கு அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனை:

“அல்லாஹும்மஃபினீ ஃபி ஹலாலிக்க அன் ஹராமிக்க வஅக்னினீ ஃபீ ஃபாள்லிக அம்மன் ஸிவாக்க”

(பொருள்: இறைவா! உனது ஹலாலைக் கொண்டே உன்னால் ஹராமாக்கப்பட்டதின் தேவை ஏற்ப்படுவதிலிருந்து என்னை போதுமானவனாக்கி விடு! உன் கிருபையைக் கொண்டு பிறரை விட்டு என்னைத் தேவயற்றவனாக்கி விடு!) நூல்: திர்மிதி 3563

கடனிலிருந்து பாதுகாவல் தேடி நபி (ஸல்) அவர்கள் செய்த துஆ:

“அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் ஹம்மி வல் ஹஸனி வல் அஜ்ஸி வல் கஸலி வல் புக்லி வல் ஜுப்னி வளலஇத்தய்னி வகலபத்திர் ரிஜால்.”

(பொருள்: இறைவா! துக்கத்திலிருந்தும், கவலையிலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.) நூல்: புகாரி 2893.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *