இஸ்லாத்தின் பார்வையில் காதல்

அல்லாஹ் கூறுகின்றான்:

பெண்கள் ஹிஜாப் அணிவதற்கான அவசியத்தையும் யார் யார் முன்னிலையில் ஹிஜாப் அணியவேண்டும் என்பதையும் அல்லாஹ் தன் திருமறையில் விளக்குகின்றான்.

“இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக:

அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது;
இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்;

மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;

மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)

மேற்கண்ட வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் இரத்த பந்த உறவினர்கள் தவிர்த்த ஏனைய உறவினர்களாக இருந்தாலும் சரி அல்லது உறவினரல்லாத மற்றவர்களாக இருந்தாலும் சரியே! அவர்கள் முந்நிலையில் ஒரு முஸ்லிமான பெண் ஹிஜாபின்றி நிற்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை!

மகரமல்லாத அந்நியர்கள் முந்நிலையில் ஹிஜாபின்றி நிற்கக் கூட அனுமிதியில்லாதிருக்கையில் அவர்களுடன் தனிமையில் சுற்றுவதை எவ்வாறு இஸ்லாம் அனுமதிக்கும்?

”ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒருபெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்யவேண்டாம்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3006: 5233.; முஸ்லிம்: 3336.)

“ஒரு அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்” என்பதாக நபியவர்கள் கூறுகிறார்கள். (திர்மிதீ,முஸ்னத் அஹ்ம)

நேரடியாக சந்தித்துப் பேச தடையெனில் கைப்பேசி மூலம் பேசலமல்லவா? என்ற கேள்வியும் எழ வாய்ப்பிருக்கிருதல்லவா? அதற்கும் அல்லாஹ் பின்வரும் வசனத்தின் மூலம் தடை விதிக்கின்றான்:

“நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள்.” (அல்குர்அன் 33:32)

காதல் என்ற போர்வையில் அந்நிய ஆணும், பெண்ணும் சந்தித்துப் பேசுவதை இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை என்பதை பின்றவரும் நபிமொழியில் இருந்து அறிந்துக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம) உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன. கண் செய்யும் விபசாரம் தவறான பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் தவறான (உணர்வுகளை தூண்டிவிடும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது மர்ம உறுப்பு இதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்யாக்குகிறது.”

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி; நூல் : புஹாரி

காதல் என்ற போர்வையில் ஏற்படும் இத்தகைய உறவுகள் அவர்களை விபச்சாரத்தின் பால் இட்டுச் செல்கின்றன என்பதை மேற்கண்ட நபிமொழி தெளிவாகவே எச்சரிக்கின்றது!

அது சரி! இவ்வளவு கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டும் தானா? ஆண்கள் தம் மனம் போன போக்கில் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளலாமா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு தான்!

மேற்கண்ட அல்-குர்ஆன் வசனம் 24:31 க்கு முந்தைய வசனம் ஆண்களுக்குரிய ஹிஜாபை வலியுறுத்துவதைக் காணலாம்!

“(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.” (அல்குர்அன் 24:30)

தனக்கு உரிமையில்லாத அந்நியப் பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதைக் கூட அல்-குர்ஆன் மூலம் இறைவன் தடை செய்திருப்பதைக் காணலாம்.

“உங்களில் , திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்” என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார். (நூல்: புகாரி 1905.)

இஸ்லாத்தைப் பொருத்தவரை இரத்தபந்த உறவுகளல்லாது மற்றவர்களிடத்தில் உறவு என்பது திருமண பந்தத்தில் மட்டும் தான் ஏற்படும்! இவையல்லாது ஏற்படுகின்ற உறவு இஸ்லாத்தைப் பொருத்தவரை கூடாத உறவாகும்! ஒரு பெண்ணைப் பொருத்தவரை அவர் அந்நிய ஆடவர் முந்நிலையில் தன் அழகு அலங்காரங்காரங்களை மறைத்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றாள்.

எனவே, மேற்கண்ட திருமறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் காதல் என்ற போர்வையில் அந்நிய ஆணும் பெண்ணும் நெருங்கிப் பழகுவதையும் ஊர் சுற்றுவதையும் இஸ்லாம் முற்று முழுதாக தடைசெய்திருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *