அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ மற்றும் ‘தப்லீக் ஜமாஅத்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர். அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன:

1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத்

ஆகியனவாகும். இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும். உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள், தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது! அவர்களை அந்த ‘ஷெய்குகள்’ கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த ‘போலி ஸூஃபிகள்’.

முரீது வாங்கிய ஒருவர், ‘தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல’ இருக்க வேண்டுமாம். அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்! மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர். முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம். இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் ஷெய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்றும் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இன்னும் வழிகெட்ட சிலர், ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் ‘யா ஷெய்கு’ அல்லது ‘யா பீர் அவுலியா’ என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர். இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ‘ஷிர்க்’கான செயல்களாகும்.

இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும். ஏனென்றால் அல்லாஹ் இஸ்லாம் மார்க்கத்தை நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே பரிபூர்ணப்படுத்திவிட்டான். (பார்க்கவும் அல்-குர்ஆன் 5:3)

இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில், நபி (ஸல்) அவர்களின் கடுமையான பல எச்சரிக்கைகளையும் மீறி, இறைவனை சென்றடையும் வழிமுறைகள் என புதிய வழிமுறைகைளைத் (தரீக்காக்களைத்) மார்க்கத்தில் தோற்றுவித்தன் விளைவு, இன்று உலகில் 200 க்கும் மேற்பட்ட தரீக்காக்கள் தோன்றியிருக்கின்றன. இன்னும் பல தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன! சிலர், உலகம் முழுவதிலும் உள்ள சூஃபித்துவத் தரீக்காக்களின் எண்ணிக்கை 1000 க்கும் மேல் என்று கூட சொல்கிறார்கள்! உண்மையான எண்ணிக்கையை அல்லாஹ்வே அறிவான்.

இவ்வாறாக மார்க்கத்தில் புகுத்தப்பட்ட பலநூறு தரீக்காக்களில் (Sufi Orders) சில..

காதிரிய்யா, முஹம்மதிய்யா, ரிபாஃயிய்யா, ஷாதுலிய்யா, நக்ஷபந்தியா,  மலமாத்தியா, குப்ராவிய்யா, மெலேவிய்யா, பக்தஷியா, நிஹ்மாதலாஹிய்யா, பைரமிய்யா, சிஷ்திய்யா, கல்வத்தியா, தஜானிய்யா, முரீதிய்யா, கலந்தரிய்யா, முத்தாஹ் கா தரீக்கா (Mutah ka Tareeqa) இன்னும் இதுபோன்ற பல ‘ய்யா’ க்கள். மேலும் விபரமறிய பின்வரும் சுட்டியை ‘கிளிக்’ செய்யவும்.   http://www.uga.edu/islam/sufismorders.html.

இந்த தரீக்காவாதிகள் ஒவ்வொருவரும் தமது பகுதியில் இருக்கும், தாம் பின்பற்றுகின்ற தரீக்காவே சிறந்தது, இறைவனின் அன்பை பெறவல்ல சிறந்த வழிமுறை (தரீக்கா-பாதை-வழிமுறை) என்று கூறிக்கொள்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு தரீக்காவைச் சேர்ந்தவர்களும் தமது விருப்பத்திற்கேற்ப புதிய வணக்க வழிமுறைகளை உருவாக்கி ‘இந்த வழிமுறையில் இறைவனைத் துதித்தால் இறைவனை எளிதில் அடையலாம்; மோட்சம் பெறலாம்’ என்றும் வாதிடுகின்றனர். மேலும் ஒவ்வொரு தரீக்காவைச் சேர்ந்தவர்களும் தங்களின் தரீக்காக் கொள்கைகைளைத் தாங்கிப்பிடிப்பதற்காக குர்ஆன் ஹதீஸ்களின் கருத்துக்களைஅவர்களுக்கு தகுந்தவாறு மாற்றி சுயவிளக்கம் கொடுக்க முயல்கின்றனர். ஆனால் குர்ஆனின் பல வசனங்களும் ஸஹீஹான ஹதீஸ்களும் பித்அத்களைப் பற்றி நேரடியாகவே எச்சரிக்கின்றன.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “நமது அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும்” என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

இந்தக் கட்டுரையில், இன்று தமிழகத்திலே தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் ஊர்களில் நடைமுறையில் இருக்கும் ஷாதுலிய்யா தரீக்காவையும் அதன் போதனைகள் குர்ஆன் ஹதீஸ்களுக்கு எவ்வாறெல்லாம் முரண்படுகின்றது என்றும் பார்ப்போம்.

எகிப்தில் அடக்கமாகியிருக்கும் அபு அல் ஹஸன் அல் ஷாதுலி (பிறப்பு: ஹிஜ்ரி 593 – இறப்பு: ஹிஜ்ரி 656) அவர்களின் பெயரால் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த ஷாதுலிய்யா தரீக்கா. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தோற்றுவிக்கப்பட்ட ஸூஃபியசக் கொள்கைகளில் ஒன்றான இந்த தரீக்காவிற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

இந்த தரீக்காவாதிகளால் வெளியிடப்பட்டிருக்கும் ‘ஷாதுலிய்யா நாயகத்தின் ஒளராது தொகுப்பு’ என்ற நூலில் ‘ஷாதுலிய்யா நாயகத்தின் பொன்மொழிகள்’ என்று இவர்கள் வர்ணிக்கும் சிலவற்றைப் பாருங்கள்:

‘என் நாவு மீது ஷரீஅத் என்ற கடிவாளம்இல்லாதிருப்பின் நியாயத் தீர்ப்பு நாள் வரையுள்ள காரியங்களை நான் உங்களுக்கு அறிவிப்பேன்’ – ஷாதுலி நாயகம்.

மறைவனான விஷயங்களை அல்லாஹ் மட்டுமே நன்கறிவான், அவனைத் தவிர வேறு யாருக்கும் மறைவான விஷயங்கள் தெரியாது என்று திருக்குர்ஆன் பறைசாற்றிக் கொண்டிருக்க, ஷாதுலி நாயகமோ தனக்கு எதிர்காலத்தைப் பற்றிய அதுவும் கியாம நாள் வரையிலான மறைவான விஷயங்கள் தெரியும் என கூறியிருப்பதாக அந்நூல் கூறுகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்; இன்னும்: (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் 27:65)

நீர் கூறும்: ‘என்னிடத்தில் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை. மறைவானவற்றை நான் அறியமாட்டேன்; நிச்சயமாக நான் ஒரு மலக்காக இருக்கின்றேன் என்றும் நான் உங்களிடம் சொல்லவில்லை; எனக்கு (வஹீயாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.’ இன்னும் நீர் கூறும்: ‘குருடனும் பார்வையுடையவனும் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்-குர்ஆன் 6:50)

அல்லாஹ் அறிவித்து தருவதைத் தவிர்த்து நபி (ஸல்) அவர்களுக்கே மறைவான விஷயங்கள் தெரியாது என அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறியிருக்க, தரீக்காவாதிகளோ தம்முடைய ஷெய்ஹூக்கு கியாம நாள் வரையிலான மறைவான விஷயங்கள் தெரியும் என்று வாதிடுகிறார்கள்.

இன்னும் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபாவான பாஸி – யின் உளறல்களைப் பாருங்கள்:

“அர்ஷூ, குர்ஸீ மற்றும் ஸூரைய்யா என்னும் விண்மீனுக்கு மேலே உள்ளவற்றையும் நான் கண்டேன், அவை எனது ஆனைக்கு கீழ்படிகின்றன”

“என் கையைப் பிடித்து என்னை நாடுபவர்களிடம் என்னை விற்று விடுங்கள். என் கையைப் பிடித்து சந்தைக்கு கொண்டு போய்க் காதலர்களிடம் விற்றுவிடுங்கள்”

குடிகாரனின் உளறல்களைவிட மிக மோசமான இத்தகைய வரிகளையுடையப் பாடல்களைத் தான் ‘ஹல்கா’ என்ற பெயரில் நம்முடைய  ஊர்களில் நடைபெறுகின்ற ஷாதுலிய்யா தரீக்காவின் ‘ஹல்கா’ (திக்ரு)?? மஜ்லிஸ்களில் பயபக்தியுடன் பாடுகின்றனர். இதில் வேதனையான விசயம் என்னவென்றால் இத்தகைய செயல்களைச் செய்து விட்டு இதை இறந்தவர்களுக்கும் ‘சமர்ப்பணம்’ வேறு செய்கின்றனர்.

நிரந்தர நரகத்திற்கு இட்டுச் செல்லும் மாபெரும் பாவமாகிய இறைவனுக்கு இணை வைக்கும் செயலைத் செய்யத் தூண்டும் பாஸியின் மற்றுமொரு உளறலைப் பாருங்கள்.

“திக்கற்றவனே! நீ தாகத்துடன் இருந்தால் என்னை ‘பாஸியே’ என்று அழைப்பாயாக! நான் விரைந்து வருவேன்”

ஆனால் அல்லாஹ் கூறுகின்றான்:

“கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத – அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது” (அல்-குர்ஆன் 46:5)

“நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே! அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்! அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ, அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும், தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்” (அல்குர்ஆன் 7:196-197)

இறைவனையல்லாது மற்றவர்களை அழைத்து உதவி தேடுவபவர்களை விட வழிகெட்டவர்கள் யார்? என இறைவன் கூறுகின்றான். ஆனால் ஷாதுலிய்யா தரீக்காவின் கலீஃபாவோ, என்னையழையுங்கள்! ‘நான் விரைந்து வருவேன்’ என்கிறார்.

ஷாதுலிய்யா தரீக்காவாதிகளின் உளறல்களை இன்னும் கேளுங்கள்!

‘ஷாதுலி நாயகமே! நான் உங்களை சந்திப்பதையே விரும்புகின்றேன்; அதைத் தவிர வேறு விருப்பமேயில்லை’ ‘ஞானிகளின் இதயங்களுக்கும் கண்களுண்டு. அவை சராசரி மனிதர்கள் பார்க்க முடியாதவற்றையெல்லாம் பார்க்கின்றன’

‘அவர்களுக்கு சில நாக்குகள் உள்ளன. அவற்றைக் கொண்டு அவர்கள் ரகசியமாக உரையாடுவார்கள. கிராமுன் காத்திபீன் ஆகிய சங்கைக்குரிய எழுத்தாளர்களுக்குக் கூடத் தெரியாது’

இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டுவைக்கும் எவ்வளவு மோசமான கருத்துக்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:

“மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை” (அல்-குர்ஆன் 50:16-18)

‘கண்காணித்து எழுதக்கூடியவர் இல்லாமல் எந்த சொல்லையும் மனிதன் மொழிவதில்லை’ என்று இறைவன் கூறியிருக்க, ஷாதுலிய்யா தரீக்காவாதிகளோ, இல்லை இல்லை! எங்கள் ஷெய்குமார்கள், மலக்குகளுக்குக் கூட தெரியாமல் உரையாட ஆற்றலுடையவர்கள் என்கின்றனர்.

மார்க்கம் பற்றிய போதிய அறிவில்லாமலும், அரபியின் பொருளறியாமலும் தங்கள் வயிற்றைக் கழுவிக்கொள்வதற்காக தரீக்காவாதிகளின் கொள்கைக்கு துதிபாடும் புரோகித மவ்லவிகளின் ஆசியுடனும் இத்தகைய வழிகெட்ட கொள்கைகளையுடைய ஷாதுலிய்யா தரீக்காவைத் தான் நாம், ‘நம்முடைய முன்னோர்களின் வழிமுறை’ என்ற பெயரில் காலம் காலமாக எவ்வித சுயசிந்தனையுமின்றி பின்பற்றி வருகின்றோம். முன்னோர்கள் செய்தது சரியா? அவர்களின் செயல்கள் குர்ஆன் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தது தானா? என்றெல்லாம் சிறிதும் சிந்திக்காமல் செயல்பட்டு வருகின்றோம்.

அல்லாஹ் கூறுகின்றான்:

‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால் ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். (அல்-குர்ஆன் 2:170-171)

இது போன்று இன்னும் பல வசனங்களில் முன்னோர்களை கண்மூடித்தனமாகப் பின்றுவது கூடாது என்றும் குர்ஆன் ஹதீஸ்களைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு மனமுரண்டாக தம் முன்னோர்களைப் பின்பற்றினால் மறுமையில் எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று விளக்கியிருக்கின்றான்.

எனவே சகோதர சகோதரிகளே! இஸ்லாம் என்பது,

– அல்-குர்ஆனும் அவனது திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுடைய வழிமுறையும் தான்,

– அல்-குர்ஆன் மற்றும் நபிவழிமுறையாகிய சுன்னாவையும் தவிர்த்த ஏனைய ‘ய்யா’ க்களும் ‘இஸங்களும்’ ‘பித்அத்கள்’ என்று சொல்லப்படக்கூடிய நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடுகளாகும்

என்பதை நாம் சிந்தித்துணர்ந்து அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழியில் நமது வாழ்வை அமைத்துக்கொள்ள முன்வரவேண்டும். அல்லாஹ் அதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...
One thought on “குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா”
  1. assalamu alaikum,
    we must avoid following thareeqah to enter paradise.we must follow quran and hadees only not follow slave of Allah the article about thareeqa is very excellent .thank you

    .A.basheer ahamed sivagangai.

Leave a Reply to basheer ahamed.A Cancel reply

Your email address will not be published. Required fields are marked *