ரமழானில் நன்மைகளை களவாடும் திருடர்கள்
ஒவ்வொரு வருடமும் ரமழான் மாதம் வருகிறது; நாமும் வழக்கம்போல் வரவேற்க தயாராகி விடுகின்றோம்! சென்ற வருட ரமழான் நம்மை எப்படி பண்படுத்தி இருக்கிறது? என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து பார்த்தால், ரமழான் நம்மை பண்படுத்தியதற்கு பதிலாக புண்படுத்தியதுதான் அதிகம் என்பதை சுயபரிசோதனையின் முடிவில் காணலாம்.

  • சங்கையான குர்ஆன் இறங்கிய மாதம்!
  • உம்ரா செய்தால் ஹஜ் நன்மை கிடைக்கும் மாதம்!
  • கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் மாதம்!
  • பாவங்களைப் போக்கும் நோன்பும் இரவு வணக்கமும் கொண்ட மாதம்!
  • சுவர்க்கத்தில் ரய்யான் என்ற தனி வாசல் கிடைக்கும் மாதம்!
  • அருள் நிறைந்த மாதம்!
  • நன்மைகளை அதிகம் பெறக்கூடிய மாதம்!
  • பிழை பொறுக்கத்தேடும் மாதம்!
  • அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம்!
  • சுவர்க்க வாசல் திறக்கப்பட்டு நரக வாசல்கள் மூடப்படும் மாதம்!
  • சைத்தான்கள் விலங்கிடப்படும் மாதம்!
  • ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஓர் இரவைக் கொண்ட மாதம்!
  • ஒன்றுக்கு 700க்கும் மேற்பட்ட நன்மைகளை அடையும் மாதம்!
இப்படி ரமழான் முழுவதும் நாம் நன்மைகளை கொள்ளை அடிக்க வேண்டும்! ஆனால் என்ன ஒரு கைசேதம்? நாம் செய்யும் சொற்ப நல்ல அமல்களைக் கூட சில திருடர்கள் கொள்ள அடித்துக்கொண்டு சென்று விடுகிறார்கள். அந்த திருடர்கள் யார்? அவர்களிடம் இருந்து நாம் எப்படி பாதுகாப்பு பெற வேண்டும்? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
1. தொலைக்காட்சி:  
ஒரு ஆபத்தான முதல் திருடன்.  இது ஒருவரின் நோன்பைக் கெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் பயனற்ற சின்னத்திரை தொடர்கள், நிகழ்ச்சிகள், சினிமா, ஆபாசமானவைகளை காண்பதால் நோன்பின் வெகுமதியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சில சமயங்களில் நோன்பை விடக்கூடிய சூழலையும் உருவாக்கிவிடும்.  நேரம் வீணாவதற்கான காரியங்களில் முதல் இடம் வகிப்பது தொலைக்காட்சிப் பெட்டிதான். யதார்த்தமாக சொல்வதென்றால் இதன் மூலம் 5 % உலகாதாயங்களைப் பெறுவதற்காக நாம் செய்யும் சொற்ப நல்லறங்களின் 95% கெட்டு நாசமாகிறோம் என்பதுதான் உண்மை!
சின்னத்திரையும். வெள்ளித்திரையும் சேர்ந்து தனி மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் நாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கிறது. இவற்றால் ஏற்படும் கேடுகளை, தீமைகளை சொல்லி மாளாது.
ஆகையால், தேவை இல்லாத நிகழ்ச்சிகளை காண்பதை விட்டும் தவிர்ந்து கொண்டு, இது ஒரு குர்ஆன் மாதம் என்பதால் நேரம் ஒதுக்கி  திருமறையை அதிகமதிகம் ஒதி நோன்பின் முழு பயனையும் அடைய முயற்சிக்க வேண்டும்.
2. ஷாப்பிங் மால்/ சந்தைகள் (Markets):
பணத்தையும, நேரத்தையும் கணக்கில்லாமல் செலவழிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு திருடன்.  முக்கியமாக சொல்வதென்றால், நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரமழான் மாதங்களில் தேவையில்லாமல் ஷாப்பிங் மால்கள் சென்று நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் வாழ்க்கையை (நேரத்தை)  எவ்வாறு செலவழித்தாய்? என்ற கேள்விக்கு பதில் சொல்லாத வரை ஒரு அடிகூட முன்னால் எடுத்து வைக்க முடியாது” (திர்மிதி)
அதைத் தவிர்ப்பதற்கு முதலில் உங்கள் இலக்கை, என்ன வாங்க வேண்டும்? எப்போது வாங்க வேண்டும்? என்பதை வரையறுத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டு, நேரத்தை மீதப்படுத்தி நல்ல அமல்கள் செய்து நன்மையை அடைய முயற்சிக்க வேண்டும்.
3. இரவில் தாமதமாக உறங்கி/தாமதமாக எழுந்திருத்தல்:
இது உங்களின் மிகவும் மதிப்புமிக்க நேரத்தைத் திருடுகிறது.
“ஸஹர் செய்யுங்கள் அதிலே பரக்கத் இருக்கிறது” என்ற ஹதீஸுக்கு மாற்றமாக, சிலர் பாங்கு சொல்வதற்கு சற்று முன்பு எழுந்து உடனே ஸஹர் செய்துவிட்டு பஜ்ர் தொழாமல் உறங்கி விடுவதை பார்க்கிறோம்.
தாமதமாக உறங்குவதால் தஹஜ்ஜத் தொழுகையை விடுவதற்கு காரணமாக ஆகிவிடுகிறது. இறைவன் தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்பை தன்னுடைய திருமறையில்,
“இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும்”. (அல்-குர்ஆன் 17:79)
மேலும் நேரத்தை வீணாக் கழித்துவிட்டு, தாமதமாக உறங்குவதால், இரவின் கடைசி மூன்றில் இறைவன் கீழ்வானில் இறங்கி யார் என்னிடம் மன்னிப்பு கேட்கிறார்களோ அவரை மன்னிக்கிறேன் என்று சொல்கிறானே, அந்த மன்னிப்பு தேடுவதை பாழாக்கி விடுகிறது.
ஆகையால், இரவுத்தொழுகையை முடித்த உடன் சிறிது நேரம் உறங்கிவிட்டு, அதிகாலையில் சீக்கிரம் எழுந்து தஹஜ்ஜத் தொழுது இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்கக்கூடியவர்களாக நாம் மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
4. சமையலறை:
ரமழானில் மதிப்புமிக்க நேரத்தை, முக்கியமாக பெண்களுக்கு, வீணடிக்கும் மற்றொரு திருடன்தான் இந்த சமையலறை.
நிறைய ஓய்வு நேரம் கிடைக்கக் கூடிய ரமழான் மாதங்களில் தனக்குத் தெரிந்த வகை வகையான உணவுகளால் இப்தாரையும் ஸஹரையும் சிறப்பிப்பதற்காக வேலைப்பளுவை வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு, குர் ஆனையும் ஓதாமல் நேரத்தை பாழ்படுத்திக்கொண்டு, நன்மையை அறுவடை செய்ய வேண்டிய அற்புத மாதத்தையும் வீணடித்து விடுகிறோம். முக்கியமாக பெண்கள் லுஹர் தொழுகை முடிந்ததில் இருந்து இஃப்தார் வரை சமையலறையை விட்டு வருவதில்லை. பல வீடுகளில் அதிகமான உணவுகளை தயாரித்து சாப்பிட முடியாமல் குர்ஆனின் போதனைகளுக்கு மாற்றமாக உணவுகளை வீணாக்குவதையும் பார்க்க முடிகிறது.
சொற்ப நேரத்தில் தேவைகளுக்கு சமைத்துக்கொண்டு, அதிகமான நேரங்களில் குர்ஆனை ஒதுவதற்கும் மற்ற நல்ல அமல்களை செய்வதற்கும் நாம் முயற்சிக்க வேண்டும்.
5. தொலைபேசி: 
சிறுவர் முதல் பெரியவர் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரின் நேரத்தையும் வீணடிக்கும் மகத்தான திருடன்.
தொலைபேசியை எடுத்தால் இப்போதெல்லாம் மணிக்கணக்கில் தேவை இல்லாமல் பேசுவது வழக்கமாகிவிட்டது. நீண்ட உரையாடல்கள், ஒருவர் மற்றவரைப் பற்றி புறம் பேசுதல், வீண் பேச்சுக்கள் போன்றவைதான் அந்த உரையாடலில் அதிகம் காண முடியும்.
தொலைபேசி உரையாடல்களில் மார்க்கம் மற்றும் நன்மையான விஷயங்களை விவாதிப்போர் சொற்பமானவர்களே. இறைவன் திருமறையில் புறம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள் என்று எச்சரித்து இருந்தும், பெரும்பாலானவர்களின் உரையாடல்களில் ஒருவர் மற்றொருவரைப்பற்றி புறம் பேசுவது அதிகமாக உள்ளது.
“உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்! உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா?”    (அல்-குர்ஆன் 49:12)
ஆகையால், ரமழான் மாதங்களில் நீண்ட மற்றும் தேவை இல்லாத தொலைபேசி உரையாடல்களை தவிர்ந்து கொண்டு கிடைக்கக்கூடிய நேரத்தில் நற்கருமங்கள் செய்து பயனடைய வேண்டும்.
6. கஞ்சத்தனம்:
ரமழான் மாதங்களில் நாம் செய்யக்கூடிய நல்ல அமல்கள், தான தர்மங்களுக்கு இறைவன் ஒன்று முதல் 700 மடங்கு நன்மையை கொடுக்கின்றான். ஆனால் ஷைத்தான், ‘தர்மங்கள் செய்வதால் செல்வம் குறைந்து வறுமை ஏற்பட்டுவிடும்’ என்று நம்மை பயமுறுத்துகின்றான்! தர்மங்கள் செய்ய வலியுறுத்தியும், கஞ்சத்தனத்திலிருந்து விலகி இருக்குமாறும் குர்ஆன் ஹதீஸில் அதிகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்” (அல்-குர்ஆன் 2:268)
“அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் கஞ்சத்தனதம் செய்கிறார்களோ, அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் – அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான். அவர்கள் கஞ்சத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்” (அல்-குர்ஆன் 3:180)
“அத்தகையோர் கஞ்சத்தனம் செய்வதுடன், (பிற) மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படித் தூண்டி, அல்லாஹ் தன் அருட்கொடையினின்று அவர்களுக்குக் கொடுத்ததை மறைத்துக்கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்” (அல்-குர்ஆன் 4:37)
“(இறைவா!) நான் உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், மண்ணறையின் (கப்ரின்) வேதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும், வாழ்வு மற்றும் மரண வேளையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்து வந்தார்கள்.” –  (புஹாரி 4707)
ஆகையால் ரமழான் மாதங்களில், கஞ்சத்தனத்திலிருந்தும் விலகி அதிகமான தான தர்மங்கள் செய்து நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.
7. ஒன்று கூடல் (Gatherings/get together):
ரமழான் மாதங்களில் அல்லாஹ்வை நினைவு கூர்வதில் இருந்து நம்மை, முக்கியமாக இளைஞர்களை, தடுப்பதில் இந்த ஒன்று கூடல் என்ற திருடனின் செயல் முக்கிய பங்காற்றுகிறது.
நோன்பு கால நேரங்களில், இரவு வணக்கங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக, அதிகமான இளைஞர்கள் ஒன்று கூடி தேவை இல்லாத வீண் பேச்சுக்கள் /அரட்டைகளில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற செயல்கள் நோன்பின் முக்கியத்துவத்தை குறைத்து விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் அருவருப்பான பேச்சுகளைப் பேசவேண்டாம், கூச்சலிட வேண்டாம். எவரேனும் திட்டினால் அல்லது சண்டையிட்டால் “நான் நோன்பாளி’ என்று அவர் கூறட்டும்.” (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவர் பாவமான சொல், செயலிலிருந்து விலகிக்கொள்ளவில்லையோ அவர் உணவு, பானத்தைத் தவிர்ப்பதில் அல்லாஹ்வுக்கு எவ்விதத்தேவையுமில்லை.” (ஸஹீஹுல் புகாரி)
ஆகையால், மார்க்கம் சம்பந்தமான கூட்டங்களை தவிர்த்து, தேவையற்ற கூட்டங்கள்/ வீண் பேச்சுக்களை தவிர்ந்து இறை உவப்பை பெறுவோம்.
8. சமூக ஊடகங்கள் (Social Media):
ரமழான் மாதத்தில் நம்முடைய நற்செயல்கள் அனைத்தையும் பாழ்படுத்த்தும் திருடனுக்கெல்லாம் தலையாய திருடன் தான் இந்த சமூக ஊடகங்கள்.
யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தளங்களில் மூழ்கி, நம்முடைய பொன்னான நேரத்தை பாழ்படுத்தி நன்மைக்கு பதிலாக தீமையை சம்பாதித்துக்கொண்டு இருக்கிறோம்.
அளவுக்கு மிஞ்சினால் சமூக ஊடகமும் நஞ்சு என்ற கூற்றுப்படி, தாவா பணி செய்வோர் அதை முறையாக பயன்படுத்தி, சமூக ஊடகங்களில் நேரம் செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ள வகையில் உபயோகித்து இறை உவப்பை பெறுவோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆதமுடைய மகனின் அனைத்து நற்செயலுக்கும் பத்திலிருந்து இரட்டிப்பான எழுநூறு மடங்குவரை நன்மையளிக்கப்படும். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத்தவிர, அது எனக்குரியது. நானே அதற்கு கூலிக் கொடுக்கிறேன். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
இதனால் மார்க்கப்பற்றுள்ள ஒரு முஸ்லிம், பரக்கத் பொருந்திய இம்மாதத்தின் நேரங்களை பொன்னாகக் கருதி, அதன் பகல் நேரங்களில் நோன்பு, தொழுகை, குர்ஆன் ஒதுதல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களிலும், இரவு நேரங்களில் தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் துஆவிலும் ஈடுபட்டு ரய்யான் எனும் சுவன வாயியில் வழியாக நாமும் நமது குடும்பத்தார்களும் சுவனத்தில் நுழையும் நற்பேற்றைப் பெற முயற்சிப்போமாக!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed