விருந்தினர்களை உபசரித்தல்

விருந்து உபச்சாரம் மூன்று நாட்கள் தான்:

நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தம் கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்” என்று கூறினார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸூரைஹ் அல் அதவி (ரலி); ஆதாரம்: புஹாரி 6019

விருந்தளிப்பவருக்கு சிரமம் ஏற்படும் அளவிற்கு விருந்தாளி தங்குவவது கூடாது:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். விருந்தினருக்கு அளிக்கும் கொடை என்பது, ஒரு பகல் ஒர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேலுள்ள (உபசரிப்பான)து தர்மமாக அமையும் (உபசரிக்கும்) அவரைச் சிரமப்படுத்தும் அளவுக்கு அவரிடம் தங்குவது விருந்தாளிக்கு அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைஹ் குவைலித் இப்னு அம்ர் (ரலி); ஆதாரம்: புஹாரி 6135

விருந்து அழைப்பை ஏற்பது அவசியம்:

“யார் விருந்தழைப்பை ஏற்க மறுக்கிறாரோ, அவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

தமக்கு விருந்தளிக்காதவருக்கும் விருந்தளிப்பது அவசியம்:

“அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு மனிதரிடம் சென்றபோது, அவர் எனக்கு விருந்தளிக்கவில்லை. அதன் பின்னர், அவர் என்னிடம் வருகிறார். நான் அவருக்கு விருந்தளிக்க வேண்டுமா? அல்லது அவர் என்னிடம் நடந்து கொண்டதைப் போல் நடக்கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவருக்கு விருந்தளிப்பீராக! என்றார்கள்.

அறிவிப்பவர்: அபுல் அஹ்வால் தமது தந்தை வழியாக; ஆதாரம்: திர்மிதீ

விருந்தாளி சாப்பிட்டு முடிக்கும் வரை உணவுத் தட்டிலிருந்து விருந்தளிப்பவர் கையை எடுக்கக் கூடாது:

“உணவுத் தட்டு வைக்கப்பட்டால் அது தூக்கப்படும் வரை எவரும் எழக்கூடாது. தனக்கு வயிறு நிரம்பிவிட்டாலும் கூட்டத்தினரின் வயிறு நிரம்பும் வரை தனது கையை தட்டிலிருந்து எடுக்கக் கூடாது. ஏனெனில் அவருடன் சாப்பிடுபவருக்கு உணவு தேவையிருக்கும் நிலையிலே வெட்கப்பட்டு தனது கையை அவர் எடுத்துவிடக்கூடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); ஆதாரம்: இப்னுமாஜா

விருந்தினர்களை வாசல் வரை வந்து வழியனுப்புதல்:

விருந்தளிப்பவர், விருந்தாளியை தனது வாசல் வரை வந்து அனுப்பி வைப்பது நபிவழியாகும்.

அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி); ஆதாரம்: இப்னுமாஜா

அழையா விருந்துக்கு செல்வது கூடாது:

நபி (ஸல்) அவர்களையும் மற்றும் நால்வரையும் ஒரு மனிதர் விருந்துக்கு அழைத்தார். அவர்களுடன் இன்னொரு மனிதரும் பின்தொடர்ந்து வந்தார். வீட்டு வாசலை நபி (ஸல்) அடைந்ததும் விருந்துக்கு அழைத்தவரிடம், “இவர் எங்களைத் தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு அனுமதியளிக்கலாம். நீர் வரும்பாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்” என்று கூறினார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதியளிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *