மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புக்கள்

1) அபிவிருத்தி (பரக்கத்து) செய்யப்பட்ட பூமி!

“(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்” (17:1)

2) உலகில் நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசல்!

அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு செய்தியில் நபி (ஸல்) அவர்களிடம்,

“எந்த பள்ளிவாசல் முதன்முதலாக நிர்மானிக்கப்பட்டது?” என கேட்ட போது, “அல்-மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா இருக்கும் பள்ளி)” என்றும் அதற்குப் பின் எது” என கேட்ட போது, “மஸ்ஜிதுல் அக்ஸா” என்றார்கள். இவை இரண்டிற்கும் இடைவெளி எத்தனை வருடங்கள்? என கேட்ட போது, “40 வருடங்கள்” என்றார்கள்.” ஆதாரம் புகாரி

3) முஸ்லிம்களின் முதலாவது கிப்லா!

அல்-பராஃ (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

“நாம் நபி (ஸல்) அவர்களோடு பைதுல் முகத்தஸ் நோக்கி 16 அல்லது 17 மாதங்களாக தொழுது வந்தோம். பின்னர் கிப்லா மாற்றப்பட்டது.” ஆதாரம் முஸ்லிம்.

“(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை” (2:144)

4) பிராயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசல்!

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மூன்று பள்ளிகளைத் தவிர (நல்லறங்கள் செய்யும் எண்ணத்தில்) பிரயாணம் செய்யாதீர்கள்! மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுர் ரஸுல் (ஸல்), மஸ்ஜிதுல் அக்ஸா” ஆதாரம் புகாரி

5) நபி (ஸல்) இஸ்ரா பயணம் மேற்கொண்ட பள்ளி!

“(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்” (17:1)

6) இப்பள்ளியில் தொழுவது பாவங்களை அழித்துவிடும்!

“ஸுலைமான் (அலை) அவர்கள் பைதுல் முகத்தஸை கட்டிய பின் அல்லாஹ்விடம் 3 விடயங்களை கேட்டார்கள். அல்லாஹ்வின் தீர்ப்பை ஒத்த தீர்ப்பு வழங்கும் தன்மை; அவருக்கு பின்னால் வரக்கூடிய யாருக்கும் வழங்கிடாத ஆட்சி; இந்த பள்ளிவாசலுக்கு தொழும் எண்ணத்தில் வருபவர்களின் பாவங்கள் அன்று பிறந்த பாலகனைப் போன்று மன்னிக்கப்பட வேண்டும்.”

ஆதாரம் நஸாயீ, இப்னு மாஜா, ஸஹீஹ் இப்னு ஹிப்பான், அஹ்மத்.

7) வெற்றி கொள்ளப்படுவது மறுமையின் அடயாளங்களில் நின்றும் உள்ளது!

அவ்ப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் தபூக் யுத்தத்தின் போது மறுமையின் 6 அடயாளங்ளை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்; அவற்றில் ‘எனது மரணம், பைதுல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுவது…’ என்றார்கள். ஆதாரம் புகாரி

8) இதன் வெற்றிக்காக சூரியன் மறையாது இருந்தமை!

அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில், “யூஷஃ இப்னு நூன் பைதுல் முக்கதஸை கைப்பற்ற சென்ற போது அல்லாஹ் அவருக்காக சூரியனை (மறையாது) பிடித்துக் கொண்டான்; இது இவரைத் தவிர வேறு எந்த மனிதனுக்காகவும் மறையாது பிடிக்கப்படாது. என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஆதாரம் அஹ்மத்.

9) தஜ்ஜால் இங்கே நுழைய மாட்டான்!

“தஜ்ஜால் நுழைவதற்கு தடுக்கப்பட்டுள்ள இடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஒன்று” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத்.

10) இந்த பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது!

250 மடங்கு சிறந்தது என்றும், 500 மடங்கு சிறந்தது என்றும், 1000 மடங்கு சிறந்தது என்றும் பல அறிவிப்புக்கள் இடம் பெறுகின்றன. ஆனால் சில செயதிகள் ஹஸன் என்ற தரத்திலும் இன்னும் சில செய்திகள் பலகீனமாகவும் உள்ளன. எனவே இது விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு உள்ளது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

M. ரிஸ்கான் முஸ்தீன் மதனி
அழைப்பாளர்,
அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம்
சவூதி அரேபியா
13-12-2017

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *