இருநூறு ஒட்டகங்களை பரிசாக அடைய விரும்பியவர்

ஹிஜ்ரத்தின் நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் சிக்காமல் மதினாவிற்கு புறப்பட்டு விட்டார்கள் என்பதை அறிந்த மக்காவின் இறை நிராகரிப்பாளர்கள், தங்களுக்குள் ஆலோசனை செய்து நபி (ஸல்) அவர்களையும் அவருடன் ஹிஜ்ரத் செய்த அபூபக்கர் (ரலி) அவர்களையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிப்பவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் நூறு ஒட்டகம் என்று பரிசை அறிவித்தனர். இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னர் சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும்(ரலி) அவர்கள் இந்தப் பரிசை எப்படியாவது அடைந்து விடவேண்டுமென்ற ஆவலில் நபி (ஸல்) அவர்களைக் கொல்லுவதற்காக புறப்பட்டுச் சென்றார். ஆனால் நடந்தது என்ன என்பதை இதோ அவரே கூறுகிறார்: –

சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும்(ரலி) அறிவித்தார்கள்: –

குறைஷிக்குலத்தின் தூதுவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அபூ பக்ர்(ரலி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது (உயிருடன்) கைது செய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்(து அறிவித்)தவர்களாக எங்களிடம் வந்தனர். அப்போது நான் எங்களின் பனூ முத்லிஜ் சமுதாயத்தின் அவைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தேன்.

அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து, அமர்ந்து கொண்டிருந்த எங்களிடையே நின்று கொண்டு, ‘சுராகாவே! சற்று முன் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரின் தோழர்களும் தாம் என்று கருதுகிறேன்” என்று கூறினார்.

அவர்கள் முஹம்மதும் தோழர்களும் தாம் என்று அறிந்து கொண்டேன். (இருப்பினும் அவரைத் திசை திருப்புவதற்காக) ‘அவர்கள் முஹம்மதும் அவர்களின் தோழர்களும் அல்லர். மாறாக, இன்னார் இன்னாரைத்தான் நீ பார்த்திருப்பாய். அவர்கள் எங்கள் கண்ணெதிரே தான் (தங்களின் காணாமல் போன ஒட்டகங்களைத் தேடிப்) போனார்கள்” என்று நான் அவரிடம் கூறினேன்.

பிறகு அந்த அவையிலேயே சிறிது நேரம் இருந்தேன். அதற்குப் பிறகு எழுந்து (என்னுடைய இல்லத்திற்குள்) நுழைந்து என் அடிமைப் பெண்ணிடம் என்னுடைய குதிரையை வெளியே கொண்டு வரும்படி உத்தரவிட்டேன் – அப்போது குதிரை ஒரு மலைக் குன்றுக்கு அப்பால் இருந்தது. – எனக்காக அதை அவள் (அங்கே) கட்டிவைத்திருந்தாள்.

பின்பு, நான் என்னுடைய ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் புற வாசல் வழியாக வெளியேறினேன். (ஈட்டியை நான் தாழ்த்திப் பிடித்திருந்ததால்) அதன் கீழ் முனையால் (என்னையும் அறியாமலேயே) தரையில் கோடு கிழித்தேன். மேலும் அதன் மேல் நுனியை தாழ்த்திக் கொண்டு என் குதிரையிடம் வந்து அதன் மீது ஏறிக் கொண்டேன். அதன் முன்னங்கால் இரண்டையும் ஒரே நேரத்தில் உயர்த்தி ஒரே நேரத்தில் பூமியில் வைக்குமாறு செய்து மிக வேகமாகப் புறப்பட்டு அவர்களை நெருங்கினேன்.

அப்போது என்னுடைய குதிரை காலிடறி அதிலிருந்து நான் விழுந்து விட்டேன். உடனே நான் எழுந்து தன்னுடைய கையை அம்புக்கூட்டை நோக்கி நீட்டி, அதிலிருந்து (சகுனச் சொற்கள் எழுதப்பட்ட) அம்புகளை எடுத்தேன். அவற்றின் மூலம் என்னால் அவர்களுக்கு பாதிப்பை உருவாக்க முடியுமா அல்லது முடியாதா என்று குறிபார்த்தேன். நான் விரும்பாத (வகையில், என்னால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ப)தே வந்தது.

என்னுடைய அம்புகளுக்கு மாறு செய்துவிட்டு என்னுடைய குதிரையில் ஏறினேன். அது பாய்ந்த வண்ணம் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திருக்குர்ஆன்) ஓதியதை கேட்டேன். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அபூபக்ர் அவர்கள் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

(அப்போது) என்னுடைய குதிரையின் முன்கால்கள் இரண்டும் முட்டுக்கால்கள் வரையிலும் பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டேன். பிறகு (அதை எழச் செய்வதற்காக) அதை நான் அரற்றினேன். அது எழுந்(திருக்க முயற்சித்)தது. (ஆனால்,) அதன் கால்களை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அது நேராக எழுந்து நின்றபோது இரண்டு முன்னங்கால்களின் அடிச் சுவட்டிலிருந்து புகை போன்று வானத்தில் பரவலாகப் புழுதி கிளம்பிற்று.

உடனே நான் (என்னுடைய) அம்புகளைக் கொண்டு (சகுனக்) குறிபார்த்தேன். நான் விரும்பாததே வந்தது. உடனே, நான் எனக்கு (உயிர்) பாதுகாப்பு நல்கும்படி அவர்களை அழைத்தேன். உடனே, அவர்கள் நின்று விட்டனர். நான் என்னுடைய குதிரையிலேறி அவர்களிடம் வந்து சேர்ந்தேன். அவர்களை விட்டும் (என்னுடைய குதிரை) தடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை நான் கண்ட போது என்னுடைய மனதிற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மார்க்க) விஷயம் மேலோங்கும் என்று தோன்றியது.

நான் அல்லாஹ்வின் தூதரிடம், “உங்களுடைய (குறைஷி) சமுதாயத்தினர் உங்களுக்காகப் பரிசை நிர்ணயித்துள்ளனர்” என்று கூறிவிட்டு அந்த (குறைஷி) மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற தகவல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். மேலும், என்னுடைய பயண உணவுப் பொருள்களை எடுத்துக் காட்டினேன். அவர்கள் என்னிடமிருந்து ஒன்றையும் (எடுத்து) எனக்கு குறைவு செய்யவுமில்லை. மேலும், (என்னிடமிருந்த எதையும்) அவர்கள் இருவரும் என்னிடம் கேட்கவுமில்லை.

ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘எங்களைப் பற்றி(ய செய்தியை) மறைத்து விடு” என்று கூறினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித்தரும்படி வேண்டினேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள் ஆமிர் இப்னு ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடமிடப்பட்ட தோல் துண்டில் (பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகத்தை) எழுதினார். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சகாக்களுடன் மதீனா நோக்கிச்) சென்றார்கள்.

ஆதாரம் : புகாரி.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *