ஜகாத்துல் ஃபித்ர் – ரமழான் நோன்பு தர்மம்

இது கடமையாக்கப் பட்டதன் நோக்கம்:

நபி (ﷺ) அவர்கள், நோன்பாளி நோன்பு நோற்றிருக்கும் போது ஏற்பட்ட குறைகள், அவனது வாய் மற்றும் உடலால் நிகழ்ந்த தவறான செயல்களுக்குப் பரிகாரமாகவும், பெருநாள் தினத்தில் ஏழைகளுக்கு உணவாகவும் ஸகாத்துல் ஃபித்ர் எனும் தர்மத்தைக் கடமையாக்கினார்கள். எவர் இதனைப் பெருநாள் தொழுகைக்கு முன் நிறைவேற்றுகிறாரோ, அவர் ஸகாத்துல் ஃபித்ரை நிறைவேற்றியவர் ஆவார். எவர் இதனைப் பெருநாள் தொழுகைக்குப் பின் நிறைவேற்றுகிறாரோ, அது ஒரு சாதாரண தர்மமாகவே கருதப்படும் என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், ஆதாரம்: அபூதாவூத் 16611).

மனிதர்களாகிய நாம் நிறைவேற்றும் வழிபாடுகளில் அறிந்தோ அறியாமலோ பல குறைகள் ஏற்படுகின்றன. அல்லாஹ் நம் மீது கொண்ட அளவற்ற கருணையின் காரணமாக, அத்தகைய குறைகளை மன்னிப்பதற்காகப் பல்வேறு வழிகளை அமைத்துள்ளான். அவற்றில் ஒரு வழியாக இதைக் குறிப்பிடலாம். மேலும், பெருநாள் என்பது அனைத்து முஸ்லிம்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய ஒரு நாளாகும். அந்த நாளில் ஏழைகளும், ஆதரவற்றோரும் உண்ண உணவின்றி துயரத்துடன் கழிக்க நேர்வதை நபி (ﷺ) அவர்கள் விரும்பவில்லை. இதனாலேயே பெருநாள் தொழுகைக்கு முன்னதாகவே இந்தத் தர்மத்தை நிறைவேற்றுவதை அவர்கள் கடமையாக்கினார்கள்.

இதிலுள்ள சட்டம் மற்றும் இதை வழங்குவது யார் மீது கடமை:

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என்ற எந்தப் பாகுபாடும் இன்றி ஒவ்வொரு முஸ்லிம் மீதும் ஸகாத்துல் ஃபித்ர் வழங்குவது கடமையாகும். பெருநாள் தினத்திற்குத் தேவையான உணவை விட அதிகமாக உள்ளவர்கள் ஒரு “ஸாஉ” அதாவது 2.60 கிலோ கிராம் அளவு வழங்குவது கடமையாகும்.

“முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர், பெரியவர், சுதந்திரமானவர், அடிமை என்ற எவ்விதப் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் தானிய வகைகளில் ஒரு ஸாஉ அளவை வழங்குவதை நபி (ﷺ) அவர்கள் கடமையாக்கினார்கள்”. (ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம்).

தமக்காகவும், தமக்குக் கீழ் இருப்பவர்களுக்காகவும், உதாரணமாக, தமது மனைவி, பிள்ளைகளுக்காகவும் ஸகாத்துல் ஃபித்ர் வழங்குவது கடமையாகும். தாயின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்காகவும் ஸகாத்துல் ஃபித்ர் வழங்குவது வரவேற்கத்தக்கது. இவ்வாறு உஸ்மான் (ரழி) அவர்கள் செயல்பட்டுள்ளார்கள்.

இது கடமையாகும் நேரம்:

ரமழான் மாதத்தின் இறுதி நாள் சூரியன் மறைந்ததிலிருந்து இது கடமையாகிறது. இதை வழங்குவதற்கு மிகவும் தகுதியான நேரம்: பெருநாள் தொழுகைக்கு முன் இதனை வழங்குவதாகும். மேலும், இதனைப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னரும் வழங்கலாம். இதனைப் பெருநாள் தொழுகைக்குப் பின்னர் வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் அது ஒரு சாதாரண தர்மமாகவே அமையும்.

பிரதான உணவு வகை எதுவோ? அதிலிருந்தே வழங்கப்பட வேண்டும்:

தானியம், உலர் உணவு, மாவு, உலர் திராட்சை, பாலாடைக்கட்டி, பேரீச்சம்பழம் அல்லது கிராமத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் பிரதான உணவு வகைகளை வழங்கலாம்.

“நாங்கள் நபி (ﷺ) அவர்களின் காலத்தில் உணவு வகைகளிலிருந்து ஒரு “ஸாஉ” அளவை தர்மமாக வழங்குவோம். அந்த நாட்களில் எங்கள் உணவாக மாவு வகைகள், உலர் உணவு வகைகள், உலர் திராட்சை வகைகள், பாலாடைக்கட்டி வகைகள், பேரீச்சம்பழம் வகைகள் பயன்படுத்தப்பட்டன”. (அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரி (ரழி) அவர்கள், ஆதாரம்: புகாரி).

வழங்க வேண்டிய அளவு:

கிலோ கிராம் எடைகளுக்கு ஏற்ப ஸாஉவின் அளவு வெவ்வேறு உணவு வகைகளுக்கு ஏற்ப மாறுபடும். சுத்தமான மாவு, தானிய வகைகளில் இது 2.40 கிலோ கிராம் அளவு என்பது மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துகளின் அளவாகும். ஒரு முத் என்பது இரண்டு கைகளையும் சேர்த்து அள்ளும் அளவாகும். எனவே, நான்கு முறை இரண்டு கைகளையும் சேர்த்து அள்ளும் அளவு ஒரு ஸாஉ ஆகும். இந்த நவீன கால அளவீட்டின்படி இது இரண்டரை முதல் மூன்று கிலோ கிராம் வரை இருக்கும்.

கூட்டாக வழங்கலாமா?

ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, அல்லது பள்ளிவாசலின் நிர்வாக சபை இந்தப் பொறுப்பை ஏற்று, கிராம மக்களிடமிருந்து சேகரித்து ஏழைகளுக்கும், ஆதரவற்றோருக்கும் வழங்கினால் அதற்கும் அனுமதி உள்ளது. ரமழான் மாத தானியத்தைப் பாதுகாப்பதற்காக நபி (ﷺ) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களை நியமித்ததாகப் புகாரி போன்ற ஆதார நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி இதற்குச் சான்றாகும்.

குறிப்பிட்ட தானிய வகைகளுக்குப் பதிலாகப் பணத்தை வழங்குவது தொடர்பான சட்டம்:

ஸகாத்துல் ஃபித்ர் தர்மத்திற்குப் பதிலாக அதன் பெறுமதியை (பணத்தை) வழங்குவதற்கு நபி (ﷺ) அவர்களிடமிருந்து எவ்வித வழிகாட்டலும் இல்லை. அவ்வாறு வழங்கப்பட்டாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் ஸகாத்துல் ஃபித்ருக்குப் பதிலாக அதன் பெறுமதியை நபி (ﷺ) அவர்களோ அல்லது அவர்களது தோழர்களோ வழங்கியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

About The Author

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *