தவாஃப் செய்யும் முறை

மீக்காத்தில் உம்ரா / ஹஜ் க்கான நிய்யத்து வைத்தவுடன் தல்பியா கூறியவர்களாக மக்காவை நோக்கிப் புறப்படவேண்டும்.

தல்பியா:

لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لَا شَرِيكَ لَكَ

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஃமத லக வல்முல்க் லா ஷரீக லக்.

பொருள்: யா அல்லாஹ்! உனது அழைப்பை ஏற்று நான் வந்துள்ளேன். இறைவா! உனக்கு நிகராக எவருமில்லை. இறைவா உன் சன்னிதானத்திற்கு வந்துள்ளேன். நிச்சயமாகப் புகழும், அருட்கொடைகளும், ஆட்சியதிகாரமும் உனக்கே உரியவை. உனக்கு எவ்வித இணையுமில்லை.

தவாஃப் செய்வதற்கு தூய்மை அவசியம்

தவாஃப் செய்பவர் சிறிய, பெரிய தொடக்குகளை விட்டும் தூய்மையாக இருப்பது தவாஃப் நிறைவேறுவதற்குரிய நிபந்தனைகளில் ஒன்றாகும். ஏனெனில் தவாஃப் தொழுகையைப் போன்றது. எனினும் தவாஃபில் (அவசியமான) பேச்சுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

புனித கஅபாவை அடைந்தவுடன்:

பள்ளிவாசல்களுக்குள் நுழையும் போது வலது காலை முன்வைத்து, நபிவழியில் உள்ள பிரார்த்தனைகளில் தமக்கு விருப்பமானதைக் கூறி எவ்வாறு நுழைவோமோ, அதே போல கஅபாவின் (மஸ்ஜிதுல் ஹராமின்) உள்ளே நுழைய வேண்டும். கஅபாவிற்குள் நுழையும் போது சொல்வதற்காகச் சிறப்புப் பிரார்த்தனைகள் எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை.

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

“அல்லாஹும்மஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக.”

பொருள்: இறைவா! உனது அருளின் வாசல்களை எனக்குத் திறந்தருள்வாயாக. (ஆதாரம்: இப்னு மாஜா, முஸ்லிம்).

بسم الله والصلاة والسلام على رسول الله اللهم اغفرلي ذنوبي وافتح لي أبواب رحمتك أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم

“பிஸ்மில்லாஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹ், அல்லாஹும்மஃபிர்லீ துனூபீ வஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மதிக, அஊது பில்லாஹில் அளீம் வபிவஜ்ஹிஹில் கரீம் வசுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.” 

பொருள்: “அல்லாஹ்வின் பெயரால் நுழைகிறேன், நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்! யா அல்லாஹ்! எனது பாவங்களை மன்னித்தருள்வாயாக, மேலும் உனது அருளின் வாசல்களை எனக்குத் திறந்தருள்வாயாக. மகத்துவமிக்க, கண்ணியமான முகத்தையுடைய, ஆதி அதிகாரம் கொண்ட அல்லாஹ்விடம் சபிக்கப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன்.” (ஆதாரம்: அபூதாவூத்).

தவாஃப் செய்யும் முறை:

  • தவாஃப் என்பது புனித கஅபாவை ஏழு முறை வலம் வருவதாகும்.
  • தவாஃபின் போது வலது தோள் திறந்திருக்க வேண்டும்.
  • கஃபா இடதுபுறம் இருக்குமாறு (நின்று கொண்டு) தவாஃபை ஆரம்பிக்கவேண்டும்.
  • தவாஃப் செய்யத் தொடங்கும் போது, உம்ரா அல்லது ஹஜ்ஜிற்காகச் செய்யும் தவாஃபை ‘அல்லாஹ்வுக்காகச் செய்கிறேன்’ என்ற தூய எண்ணத்துடன், கஅபாவின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள ‘ஹஜருல் அஸ்வத்‘ எனும் கறுப்புக் கல்லை முத்தமிட வேண்டும்.
    • அவ்வாறு முத்தமிட முடியாத சூழ்நிலையில் கைகளால் தொட்டு முத்தமிட வேண்டும்.
    • கைகளால் தொடவும் முடியாத சூழ்நிலையில், கையில் வைத்திருக்கும் கைத்தடி போன்ற ஏதேனும் ஒன்றால் தொட்டு அதை முத்தமிட வேண்டும்.
    • அவ்வாறு செய்யவும் முடியாத சூழ்நிலையில் கைகளால் அதனை நோக்கிச் சைகை செய்ய வேண்டும்.
    • ஹஜருல் அஸ்வதைத் தொடவோ, முத்தமிடவோ எளிதாக வாய்ப்புக் கிடைக்காதபோது, ஆண்களின் நெரிசலுக்கிடையில் ஹஜருல் அஸ்வதை முத்தமிட  செல்வதற்கு  பெண்களுக்கு அனுமதியில்லை. மாறாக ஆண்களை விட்டும் விலகியே தவாஃப் செய்யவேண்டும். அதிக கூட்டமில்லாமலும், ஆண்களின் நெரிசல் இல்லாமலும் இருந்தால் பெண்கள் ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடலாம்.
  • ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொடும் போதோ அல்லது அதனை நோக்கிச் சைகை செய்யும் போதோ:

الله أكبر

“அல்லாஹு அக்பர்”

என்று கூற வேண்டும்.

பொருள்: “அல்லாஹ் மிகப் பெரியவன்”.

  • உம்ரா, தமத்துஃ, இஃப்ராத் அல்லது ஹஜ்ஜையும் உம்ராவையும் இணைத்துச் செய்யும் கிரான் ஆகியவைகளில் எதையேனும் நிறைவேற்ற மக்காவிற்கு வருபவர் முதலாவதாக செய்யும் தவாஃபின் முதல் மூன்று சுற்றுக்கள் முழுவதிலும் “ரமல்” செய்ய வேண்டும். ரமல் என்பது : நெருக்கமாக அடி எடுத்து வைத்து விரைவாக நடப்பதாகும்.
  • மீதமுள்ள நான்கு சுற்றுகளையும் சாதாரண வேகத்தில் நடக்க வேண்டும்.
  • ஒவ்வொரு சுற்றையும் ஹஜருல் அஸ்வதிலிருந்து தொடங்கி அங்கேயே முடிக்க வேண்டும்.
  • தவாஃபின் போது ஹஜருல் அஸ்வதைக் கடக்கும் போதெல்லாம் அல்லாஹு அக்பர் என்று கூறி அதனைத் தொட்டு, முத்தமிடுவது ஸுன்னத்தாகும். தொட்டு முத்தமிட வாய்ப்பு இல்லையெனில் அதனைக் கடக்கும் போதெல்லாம் தக்பீர் கூறியவர்களாக -வலது கையால்- சைகை செய்து கொள்ளவேண்டும்.
  • தவாஃப் சுற்றும் போது வலது தோள் மறைக்கப்படாமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • இந்தத் தவாஃபில் மட்டும் அனைத்துச் சுற்றுக் களிலும் இழ்திபாச் செய்வது விரும்பத்தக்க செயலாகும். இழ்திபா என்பது, மேலாடையின் நடுப்பகுதியை வலது புஜத்திற்குக் கீழே (அக்குள் பகுதியில்) இட்டு அதன் இரு ஓரங்களையும் இடது தோளின்மீது போட்டுக் கொள்வதாகும்.
  • முதலாவதாகச் செய்யும்- தவாஃபைத் தவிர பிற தவாஃப்களிலும் ரமலோ, இழ்திபாவோ செய்யத் தேவையில்லை.
  • பெண்கள் எந்த தவாஃபிலும் ஸயீயிலும் ரமலோ, இழ்திபாவோ செய்யக் கூடாது.
  • தவாஃப் செய்யும் போது அல்லாஹ்வை அஞ்சியவர்களாக, அவனுக்குப் பணிந்தவர்களாக தவாஃப் செய்யவேண்டும்.
  • தவாஃபில் அதிகமாக திக்ர், துஆக்களில் ஈடுபடுவது விரும்பத்தக்க செயலாகும். அல்குர்ஆனில் ஏதேனும் சில வசனங்களை ஓதினால் அதுவும் சிறந்ததே!
  • தவாஃபிலோ, இது தவிர உள்ள பிற தவாஃப்களிலோ  குறிப்பிட்ட எந்த துஆவோ அல்லது குறிப்பிட்ட எந்த திக்ரும் ஓதுவது கடமையல்ல.
  • சிலர் தவாஃப் மற்றும் ஸயீயில் ஒவ்வொரு சுற்றிற்கும் குறிப்பிட்ட திக்ர், குறிப்பிட்ட துஆக்களை புதிதாக ஏற்படுத்தியிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக தன்னால் இயன்ற திக்ர், துஆக்களைக் கூறிக் கொள்வதே போதுமானதாகும்.
  • ருக்னுல் யமானியைக் கடக்கும் போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறியவர்களாக, அதனை வலது கையால் தொடவேண்டும். அதனை முத்தமிடக் கூடாது. அதனைத் தொடுவது சிரமமாக இருந்தால் அதனைத் தொடாமலேயே தவாஃபைத் தொடரலாம்.
  • ருக்னுல் யமானியைக் கடக்கும் போது சைகை செய்வதோ, தக்பீர் கூறுவதோ கூடாது. நாமறிந்தவரை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக ஹதீஸ் வரவில்லை.
  • ருக்னுல் யமானிக்கும் ஹஜருல் அஸ்வதுக்கும் இடையில் கீழ்க்கண்ட பிரார்த்தனையைக் கூற வேண்டும்:

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

“ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆஹிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்”

பொருள்: “எங்கள் இறைவனே! எங்களுக்கு இம்மையிலும் நன்மையைத் தருவாயாக, மறுமையிலும் நன்மையைத் தருவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக.”

(“ருக்னுல் யமானி” என்பது ஏமன் தேசத்தை நோக்கியவாறு அமைந்துள்ள கஅபாவின் ஒரு மூலையாகும். இது கஅபாவிற்குத் தென்மேற்கே அமைந்துள்ள மூலையாகும். கஅபாவைத் தவாஃப் செய்யும் போது அதனைத் தொட வேண்டும். அவ்வாறு தொடுவது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலாகும். அதனைத் தொட முடியாவிட்டாலும், அந்த இடத்திற்கு வரும் போது மேற்கண்ட பிரார்த்தனையை ஓத வேண்டும்.)

  • கஅபாவிற்கு வடக்கே இடுப்பளவு உயரமுள்ள (அரை வட்ட வடிவிலான) ஒரு பகுதி அமைந்துள்ளது. அதுவும் கஅபாவைச் சேர்ந்த ஒரு பகுதியாகும். இந்தப் பகுதியும் கஅபாவின் எல்லைக்குள் வருவதால், அதனையும் சேர்த்தே தவாஃப் செய்ய வேண்டும். இதற்கு “ஹத்தீம்” (அல்லது ஹிஜ்ர் இஸ்மாயீல்) என்று கூறப்படும்.
  • தவாஃப் செய்யும் போது மகாம் இப்ராஹீமுக்குப் பின்புறமோ, ஜம்ஜம் கிணற்றிற்குப் பின்புறமோ செல்வதில் தவறில்லை. அதிலும் குறிப்பாக நெரிசலான நேரத்தில் அவ்வாறு செய்வதில் தவறே கிடையாது. மஸ்ஜிதுல் ஹராம் -பள்ளி- முழுவதும் தவாஃப் செய்யுமிடம்தான். எனவே பள்ளியின் மாடியில் தவாஃப் செய்தால் அதுவும் நிறைவேறிவிடும். எனினும் வாய்ப்பிருக்கும் போது கஃபாவுக்கு அருகில் தவாஃப் செய்வதே சிறந்தது.
  • சுற்றுக்களின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் உறுதியானதை அதாவது, குறைந்த எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். சுற்றியது மூன்றா? நான்கா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் மூன்று என்றே முடிவெடுக்க வேண்டும். (ஸயீயி(ல்) சந்தேகம் வந்தா)லும் இவ்வாறே செய்துகொள்ள வேண்டும்.)
  • தவாஃபை முடித்ததும் தவாஃபுடைய இரண்டு ரகஅத்கள் தொழுவதற்கு முன்னர் தனது மேலாடையை -தவாஃபிற்கு முன்பு அணிந்திருந்தது போல்- இரு புஜங்களையும் போர்த்தி, அதன் இரு பகுதிகளையும் நெஞ்சில் தொங்குமாறு போட்டுக் கொள்ளவேண்டும்.

தொழுகை:

  • தவாஃப் செய்து முடித்தவுடன் மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்.
  • கூட்ட நெரிசல் போன்ற காரணத்தால் அந்த இடத்தில் தொழ முடியாவிட்டால், கஅபாவின் பள்ளிவாசலுக்குள் விரும்பிய இடத்தில் அதை நிறைவேற்றலாம்.
  • அந்த இரண்டு ரக்அத் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஃபாத்திஹா அத்தியாயத்துடன் குல் யா அய்யுஹல் காஃபிரூன் அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் ஃபாத்திஹா அத்தியாயத்துடன் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தையும் ஓத வேண்டும். இவ்விரண்டும் அல்லாத வேறு அத்தியாயத்தை ஓதினாலும் தவறில்லை.
  • தொழுகையை முடித்தவுடன் முடிந்தால் ஹஜருல் அஸ்வத் கல்லின் அருகே சென்று அதனை முத்தமிட வேண்டும்.
  • அதன் பின்னர் ஜம்ஜம் நீரைக் குடிப்பதும் விரும்பத்தக்கச் செயலாகும். (நோன்பாளிகள் அதனை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்).

தலைப்புகள்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *