ஹஜ் கடமை – ஓர் இறைக்கட்டளை!
ஹஜ் கடமையான ஓர் வழிபாடாகும், அதற்கான புனித அல்குர்ஆன் ஆதாரங்கள்:
அல்லாஹ் கூறுகிறான்:
“அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 3:97).
“ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்” (அல்குர்ஆன் 2:196).
“ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் 2:197).
ஹஜ் கடமையான ஓர் வழிபாடாகும், அதற்கான நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் உள்ள ஆதாரங்கள்:
“ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள், ‘மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான், எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்’. அப்போது ஒருவர், ‘ஒவ்வொரு வருடமுமா?’ என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று முறை கேட்கும் வரை நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள், ‘நான் ஆம் என்று கூறியிருந்தால் அது உங்களுக்குக் கடமையாகி, உங்களால் அதனை நிறைவேற்ற முடியாமல் போயிருக்கும். நான் விட்டுவிட்ட விஷயங்களில் நீங்களும் என்னைக் கேள்வி கேட்காது விட்டுவிடுங்கள். ஏனெனில், உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அதிகமாகக் கேள்விகள் கேட்டதாலும், தங்களது நபிமார்களுக்கு மாறுசெய்ததாலுமே அழிந்து போனார்கள். நான் உங்களுக்கு ஏதேனும் ஒன்றை ஏவினால், உங்களால் இயன்ற அளவு அதனைச் செயல்படுத்துங்கள், நான் எதையேனும் தடுத்தால் அதிலிருந்து முற்றிலுமாக விலகிக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.” (ஆதாரம்: முஸ்லிம்).
“ஒருமுறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்ட போது, ‘இஸ்லாம் என்பது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் வழங்குவது, ரமழான் மாதம் நோன்பு நோற்பது, அல்லாஹ்வின் புனித ஆலயமான கஅபாவிற்குச் செல்ல சக்தி பெற்றவர்கள் அங்கு சென்று ஹஜ் செய்வது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (இது ஒரு நீண்ட ஹதீஸின் சுருக்கம். ஆதாரம்: முஸ்லிம்).
“இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது: 1) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது. 2) தொழுகையை நிலைநாட்டுவது. 3) ஜகாத் வழங்குவது. 4) அந்த ஆலயத்திற்குச் செல்ல சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வது. 5) ரமழான் மாதம் நோன்பு நோற்பது.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி).
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது?’ என்று கேட்ட போது, ‘பயண வசதியும் உணவு வசதியும்’ என்று பதிலளித்தார்கள்.” (ஆதாரம்: திர்மிதி).
பெண்களுக்கு மஹரம் அவசியமாகும்
குறிப்பாகப் பெண்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அவர்களுக்கு உடல் மற்றும் பொருளாதார வசதி மட்டும் போதாது, அவர்களது பயணத்திற்குத் துணையாக ஒருவரும் தேவை. அப்படி இல்லாத போது பெண்களுக்கு ஹஜ் கடமையாகாது. அவர்களைத் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட (மஹ்ரம்) உறவினர்களில் ஒருவர் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, கணவன் அல்லது தந்தை அல்லது தந்தையின் சகோதரர்கள் அல்லது தாயின் சகோதரர்கள் அல்லது உடன் பிறந்த சகோதரர்கள்.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள், “ஒரு பெண் தன்னைத் திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட (மஹ்ரம்) துணையின்றி பயணம் செய்யக் கூடாது; மேலும் வேறொரு ஆண், மஹ்ரம் துணை இல்லாத நிலையில் (அவளது வீட்டிற்குள்) நுழையக் கூடாது” என்று கூறிய போது, ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னின்ன போர்ப்படைகளுடன் செல்ல வேண்டும், எனது மனைவியும் ஹஜ் செய்யப் புறப்பட்டுள்ளார்” என்று கூறிய போது, “அப்படியானால் நீங்கள் அவரோடு சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றுங்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).
உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வசதி பெற்ற ஒவ்வொருவருக்கும் தமது வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவது கடமையாகும். இவ்வாறு சக்தி இருந்தும் ஒருவர் இந்த வழிபாட்டைப் புறக்கணித்தால், இஸ்லாமிய அடிப்படைக் தூண்களில் ஒன்றைப் புறக்கணித்தவராகக் கருதப்படுவதுடன், கடுமையான தண்டனைக்குரிய பாவத்தைச் செய்தவராகவும் கருதப்படுவார். ஏராளமான சொத்து சுகங்களுக்கு உரிமை கொண்டாடும் பலரும் இந்த வழிபாட்டை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், ஹஜ் என்பது ஒருவர் தனது வாழ்நாளின் இறுதிப் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய ஓர் வழிபாடு என்ற மூடநம்பிக்கையும் நமது சமூகத்தில் நிலவுகிறது.
யாருக்கு உடல் மற்றும் பொருளாதார ரீதியாக வசதி கிடைக்கிறதோ, அவருக்கு அந்த நிமிடத்திலிருந்தே ஹஜ் கடமையாகி விடுகிறார். அவர் தனது முதுமைப் பருவம் வரை அதனை நிறைவேற்றாமல் அல்லது அந்த நிலையை அடைவதற்கு முன்பே இறந்து விட்டால், அவர் நிச்சயமாகக் குற்றவாளியாவார்.