ஹஜ் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள்!
“செயல்களில் மிகவும் சிறந்தது எதுவென்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொள்வது (நம்புவது)’ என்று பதிலளித்தார்கள். பின்னர் எது சிறந்தது என்று கேட்ட போது, ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் (ஜிஹாத்) செய்வது’ என்று பதிலளித்தார்கள். பின்னர் எது சிறந்தது என்று கேட்ட போது, ‘பாவங்கள் கலக்காத, ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ் (ஹஜ்ஜுல் மப்ரூத்) செய்வது’ என்று பதிலளித்தார்கள்.” (ஆதாரம்: புகாரி).
“உடலுறவு கொள்ளாமலும், பாவச் செயல்களில் ஈடுபடாமலும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் எவர் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறாரோ, அவர் அன்று பிறந்த குழந்தையைப் போல எந்தப் பாவமுமின்றி திரும்புவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).
“ஒரு உம்ரா, மற்றொரு உம்ராவிற்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும். ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கான கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை.” (ஆதாரம்: புகாரி).
“ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் மற்றும் அறப்போரில் ஈடுபடுபவர் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள்“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்).
“ஹஜ் செய்பவர்களும் உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள். அவர்கள் அவனிடம் பிரார்த்தித்தால் அவன் அதனை வழங்குகிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அவன் அதனை ஏற்றுக்கொள்கிறான்.“ (ஆதாரம்: இப்னு மாஜா, நஸாயி).
“ஒருமுறை ஆயிஷா (ரழி) அவர்கள், ‘பெண்கள் அறப்போரில் பங்கேற்பது கடமையா?’ என்று கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் ‘ஆம், அவர்கள் மீதும் கடமை உள்ளது, ஆனால் அதில் போர் கிடையாது, அது ஹஜ்ஜும் உம்ராவும் ஆகும்’ என்று பதிலளித்தார்கள்.” (ஆதாரம்: இப்னு மாஜா).
“ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது அவரது முந்தைய பாவங்களை அழித்துவிடும், ஒருவர் ஹிஜ்ரத் (புலம்பெயர்தல்) செய்வது அவரது முந்தைய பாவங்களை அழித்துவிடும், ஒருவர் ஹஜ் செய்வது அவரது முந்தைய பாவங்களை அழித்துவிடும்“ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி).