ஹஜ், உம்ரா அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள்

1- அல்லாஹ் மற்றும் அவனது ஏகத்துவத்தை உறுதியுடன் ஏற்று கடைப்பிடிப்பது:

அல்லாஹ் கூறுகிறான்: “நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ, அவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக இருக்கும்.” (அல்குர்ஆன் 18:107).

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டேன் என்று கூறி அதில் உறுதியாக இருங்கள்!” (ஆதாரம்: முஸ்லிம்).

2- அனைத்து வழிபாடுகளையும் அல்லாஹ்வுக்காக என்ற தூய எண்ணத்துடன் (இக்லாஸ்) செய்வது:

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு இவ்வேதத்தை உண்மையுடன் இறக்கியுள்ளோம். எனவே மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டுமே உளத்தூய்மையாக்கி அவனையே நீர் வணங்குவீராக.” (அல்குர்ஆன் 39:2).

“யார் தூய எண்ணத்துடன் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை) என்று கூறுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்).

மற்றவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்காவுக்குச் செல்கின்றனர்! அதனால் பிறர் மெச்சும் வகையில் நானும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது மக்களின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது அவர்களின் பாராட்டுகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்திலோ ஹஜ், உம்ரா செய்வது முகஸ்துதியாகும் (இது மறைமுகமான ஷிர்க் ஆகும்). எனவே, தூய எண்ணத்துடன், புகழையோ உலக லாபங்களையோ எதிர்பார்க்காமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும்.

3- நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கு (சுன்னாவுக்கு) உட்பட்டு வழிபாடுகள் அமைந்திருக்க வேண்டும்:

அல்லாஹ் கூறுகிறான்: “இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை எதைத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்.” (அல்குர்ஆன் 59:7).

“என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் நமது இந்த மார்க்கத்தில் நாம் ஏவாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அது நிராகரிக்கப்படும்.” (ஆதாரம்: முஸ்லிம்).

4- வழிபடுபவர்கள் தங்களது இறைநம்பிக்கையையும் நற்செயல்களையும் குஃப்ர் (நிராகரிப்பு) அல்லது ஷிர்க் (இணைவைத்தல்) மூலம் அழித்துவிடக் கூடாது:

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) உமக்கும் உமக்கு முன் இருந்தவர்களுக்கும் நிச்சயமாக வஹி மூலம் அறிவிக்கப்பட்டது என்னவென்றால், நீர் இணைவைத்தால் உம்முடைய நற்செயல்கள் அனைத்தும் அழிந்துவிடும். மேலும் நீர் நஷ்டமடைந்தவர்களில் ஒருவராகி விடுவீர்.” (அல்குர்ஆன் 39:65).

“அல்லாஹ்வையன்றி உமக்கு எந்த நன்மையோ தீமையோ செய்ய இயலாத எதனையும் நீர் அழைக்காதீர். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகி விடுவீர்.” (அல்குர்ஆன் 10:106).

அல்லாஹ் இங்கே அநியாயக்காரர் என்று கூறுவது முஷ்ரிக்கை (இணைவைப்பவனை) ஆகும். எனவே வழிபாடுகள், பிரார்த்தனைகள், நேர்ச்சைகள், பிராணிகளை அறுத்துப் பலியிடுதல், ஹஜ், உம்ரா போன்ற அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். இந்தச் செயல்களை மற்ற நபிமார்களுக்காகவோ அல்லது அவ்லியாக்கள், மகான்களுக்காகவோ செய்வது ஷிர்க் எனும் மாபெரும் பாவமாகும்.

அதுமட்டுமின்றி, இந்தகைய இணைவைப்புச் செயல்களின் காரணமாக செய்த நல்லமல்கள் அனைத்தும் அழிந்துவிடும்.

அல்லாஹ் நம்மனைவர்களையும் நல்லமல்களை அழிக்கும் இந்த ஷிர்க் எனும் மாபெரும் இணைவைப்பிலிருந்து பாதுகாப்பானாகவும்.

About The Author

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *