ஸயீ செய்யும் முறை

தவாஃப் செய்து அதன் பிறகு மகாமு இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதவுடன் ஸஃபா மற்றும் மர்வா மலைகளுக்கு இடையே ஏழு முறை சுற்றி வருவதற்கு ஸயீ எனப்படும்.

  • ஸயீ செய்யவதற்காக ஸஃபா மலைக்கு செல்ல வேண்டும்.
  • பின்னர் அதன் மீது ஏறி, கஅபாவை முன்னோக்கித் தமது கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து, தமக்குத் தேவையான பிரார்த்தனைகளைக் கேட்கலாம். பின்னர் ஓடத் தொடங்குவதற்கு முன், கஅபாவை முன்னோக்கி கீழ்க்கண்ட வசனத்தை ஓத வேண்டும்:

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ

“இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்”

பொருள்: “நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாகும்.”

  • அதன் பின்னர் கிப்லாவை முன்னோக்கி:

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், அன்ஜஸ வஃதஹ், வநஸர அப்தஹ், வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்”

என்று மூன்று முறை கூற வேண்டும்.

பொருள்: “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் ஏகன், அவனுக்கு எவ்வித இணையுமில்லை. ஆட்சியதிகாரமும் புகழும் அவனுக்கே உரியவை. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அவன் ஏகன். அல்லாஹ் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான், தனது அடியாரான நபி (ஸல்) அவர்களுக்கு உதவியளித்தான், தனியாக நின்றே அவனுக்கு எதிராக வந்த படையினரைத் தோற்கடித்தான்.”

  • பிறகு இரு கைகளையும் உயர்த்தி விரும்பிய துஆக்களைக் கேட்க வேண்டும்.
  • ஸஃபா மற்றும் மர்வாவில் அடையாளத்திற்காக வைக்கப்பட்டுள்ள அந்த சிறு பாறைகளின் மீது ஏறினால் தான் ஸயீ பரிபூரணமாகும் என சிலர் கருதுகின்றனர்.  அதன் மீது ஏற இயலவில்லையெனில், சற்று மேடான பகுதிகளில் சென்று வந்தாலே போதுமானது.
  • பிறகு அங்கிருந்து இறங்கி மர்வாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
  • முதல் (பச்சை விளக்கு) அடையாளத்தை அடைந்ததிலிருந்து இரண்டாவது (பச்சை விளக்கு) அடையாளத்தை அடையும் வரை ஆண்கள் வேகமாக நடக்க வேண்டும். பச்சை நிறத்தில் அடையாளமிடப்பட்ட பகுதியை தவிர ஸஃபா மர்வாவில் பிற இடங்களில் வேகமாக ஓடுவது தவறாகும்.
  • அவ்விரு அடையாளங்களுக்கு மத்தியில் பெண்கள் வேகமாக நடக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் -தங்கள்- அலங்காரங்களை மறைக்கவேண்டியவர்கள். எனவே அவர்கள் ஸயீயின் அனைத்துச் சுற்றுக்களிலும் நடந்தவாறே செல்ல வேண்டும்.
  • ஸயீ  யின் சுற்றுக்களின் போது குறிப்பிட்ட எந்த துஆவும் குறிப்பிட்ட எந்த திக்ரும் ஓதுவது கடமையல்ல. சிலர் தவாஃப் மற்றும் ஸயீயில் ஒவ்வொரு சுற்றிற்கும் குறிப்பிட்ட திக்ர், குறிப்பிட்ட துஆக்களை புதிதாக ஏற்படுத்தியிருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மாறாக தன்னால் இயன்ற திக்ர், துஆக்களைக் கூறிக் கொள்வதே போதுமானதாகும்.
  • அதனைக் கடந்து சென்று மர்வா மலையில் ஏற வேண்டும்.
  • பிறகு ஸஃபாவில் சொன்னதை, செய்ததை (திக்ர், துஆக்களை)ப் போன்று மர்வாவிலும் செய்ய வேண்டும்.
  • ஆனால், (ஸஃபாவில் கூறிய) “இன்னஸ் ஸஃபா வல் மர்வத மின் ஷஆஇரில்லாஹ்” என்ற (அல்குர்ஆன் 2:158-ம்) வசனத்தை மர்வாவில் கூறவேண்டியதில்லை. அவ்வசனத்தை முதல் சுற்றுக்காக ஸஃபாவில் ஏறும்போது மட்டுமே கூற வேண்டும். இவ்வாறே நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள்.
  • பிறகு அங்கிருந்து இறங்கி நடந்து செல்லவேண்டிய இடத்தில் நடந்தும், வேகமாகக் கடக்க வேண்டிய இடத்தை வேகமாகக் கடந்தும் ஸஃபா மலையை அடையவேண்டும்.
  • இவ்வாறு ஏழு முறை செல்லவேண்டும். (ஸஃபாவிலிருந்து மர்வா) செல்வது ஒரு சுற்றும், அங்கிருந்து (ஸஃபாவுக்குத்) திரும்புவது மற்றொரு சுற்றுமாகும். நபி (ஸல்) அவர்கள் மேற்கூறப் பட்டவாறே செய்துள்ளார்கள். மேலும் உங்களுடைய ஹஜ் வாழிபாட்டை என்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்! என்றும் கூறியுள்ளார்கள்.
  • ஸயீ சுற்றுக்களின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுவிட்டால் உறுதியானதை அதாவது, குறைந்த எண்ணிக்கையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். சுற்றியது மூன்றா? நான்கா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் மூன்று என்றே முடிவெடுக்க வேண்டும்.
  • தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பிறகும் ஸயீயை தொடர்வது இது தவறாகும் . ஸயீ செய்து கொண்டிருக்கும்போது கடமையான தொழுகையை அடைந்து விட்டால் ஸயீயை துண்டித்து விட்டு தொழுகையை நிறைவேற்றவேண்டும். பிறகு விடுபட்ட இடத்திலிருந்து ஸயீயை பரிபூரணமாக செய்து முடிக்க வேண்டும்.
  • ஸயீயில் முடிந்தளவு அதிகமாக திக்ர், துஆக்களில் ஈடுபடுவதும் சிறிய, பெரிய தொடக்குகளிலிருந்து தூய்மை யாக இருப்பதும் விரும்பத்தக்க செயலாகும்.
  • ஸயீ செய்யும் போது கட்டாயம் ஒளூ இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர்; இது தவறாகும். ஒளூ இல்லாமலும் ஸயீ செய்யலாம்..
  • அதுபோல், தவாஃப் செய்தபின் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் (அந்நிலையிலேயே) அவர் ஸயீ செய்தால் அதுவும் நிறைவேறிவிடும். ஏனெனில் ஸயீயின் போது தூய்மையாக இருப்பது -நாம் மேற்கூறிய வாறு- விரும்பத்தக்க செயல்தானே தவிர அதனை நிறைவேற்றுவதற்கு தூய்மையாக இருப்பது நிபந்தனையல்ல.
  • பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதம் கூட்டாக சப்தமாக து ஆ செய்வது மிகப்பெரும் தவறாகவும். அவரவர், தங்களுக்கு விருப்பமான துஆவை உள்ளச்சத்தோடு , பணிவாக , கூச்சலிடாமல் நெருக்கடி ஏற்படுத்தாமல் சப்தமின்றி கேட்க வேண்டும்.
  • ஸயீ செய்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் இருப்பது ( இழ்திபா) தவறாகும். இந்நிலை தவாஃபுல் குதூமிற்கு (ஹஜ்ஜின் ஆரம்ப தவாஃபிற்கு மட்டுமே. ஆனால் ஹாஜிகளில் அதிகமானவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகள் முடியும் வரை வலது தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே இருக்கின்றனர் இது தவறாகும்
  • ஸயீயை நிறைவேற்றிய பின் ஆண்கள் தலை(முடி)யை மழித்துக் கொள்ளவோ, குறைத்துக் கொள்ளவோ வேண்டும். எனினும் மழிப்பதே சிறந்தது.
  • ஹஜ்ஜுக்குரிய நாட்களுக்கு மிக நெருக்கத்தில் மக்காவிற்கு வருவோர் ஹஜ்ஜில் (முடியை) மழித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக (உம்ராவில்) குறைத்துக் கொள்வதே சிறந்ததாகும். துல்ஹஜ் 4-ம் நாள் தோழர்களுடன் (மக்கா) வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், பலிப்பிராணிகளை தங்களுடன் கொண்டுவராதவர்களுக்கு (உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமைக் களைந்து விடுமாறும் (முடியை) குறைத்துக் கொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள். மழித்துக் கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிடவில்லை.
  • தலையின் அனைத்துப் பகுதியிலும் உள்ள முடிகளைக் குறைப்பது அவசியமாகும். அதன் சில பகுதிகளை மட்டும் குறைப்பது போதுமானதாகாது. அதுபோல் சிலபகுதிகளை மட்டும் மழிப்பதும் போதுமானதாகாது.
  • பெண்களுக்கு (முடியை) குறைப்பது மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது கொண்டைப் பின்னல்களின் இறுதிப் பகுதியில் விரல் நுனியளவோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ முடிகளை வெட்டிக் கொள்ள வேண்டும். பெண்கள், இதைவிட அதிகமாக வெட்டிக் கொள்வது கூடாது.
  • இஹ்ராம் அணிந்தவர் மேற்கூறப்பட்டச் செயல்களைச் செய்துவிட்டால் உம்ராவை நிறைவேற்றியவராகிவிடுகிறார். அதன் பிறகு இஹ்ராமின் காரணத்தால் தடுக்கப்பட்ட அனைத்தும் அவருக்கு அனுமதியாகிவிடும்.
  • மீண்டும் 8 ஆம் நாள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து நிய்யத் வைக்கும் வரை அவருக்குத் தன் மனைவியுடன் உடலுறவு கொள்வது உட்பட அனைத்தும் அனுமதிக்கப்படும்.
  • எனினும், ஹரம் எல்லையின் வெளிப்பகுதியிலிருந்து தன்னுடன் பலிப்பிராணி யைக் கொண்டுவந்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் நிறை வேற்றும் (10-ம் நாள்)வரை இஹ்ராமுடனே இருக்க வேண்டும்.
  • ஆனால் இஃப்ராத் (Ifrad) மற்றும் கிரான் (Qiran) முறையில் ஹஜ் செய்பவர்கள் தொடர்ந்து இஹ்ராம் நிலையிலேயே இருக்க வேண்டும்.

தலைப்புகள்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *