தாமதிக்கப்படும் பாகப்பிரிவினைகள், அதனால் ஏற்படும் விளைவுகள்

செல்வம் என்பது எப்போதுமே ஒருவரிடத்தில் மட்டும் இருப்பதில்லை! நேற்று சிலரிடம் இருந்தது! இன்று அவர்கள் வறுமையில் இருக்க நேற்று வறுமையில் இருந்தவர்கள் இன்று செல்வ செழிப்புடன் இருக்கிறார்கள்! நாளை இந்த நிலை மீண்டும் மாறலாம்! இது அல்லாஹ்வின் நியதி! அல்லாஹ் கூறுகிறான்!

“நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்” (அல்-குர்ஆன் 34:39)

செல்வந்தர்கள் தன்னுடைய செல்வத்தைக் கொண்டு இருமாப்பு கொள்ளாமல் இது இறைவன் அருளிய அருட்கொடை என்றும் எந்த நேரத்திலும் இது நம்மிடமிருந்து பறிக்கப்பட்டு ஏழ்மை நிலையிலுள்ள மற்றவர்களுக்கு அவனால் கொடுக்க முடியும் என்று இறைவனுக்கு நன்றி கூர்ந்தவனாக வாழவேண்டும்.

இப்போது விசயத்திற்கு வருவோம்!

நம்மில் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கும் விசயங்களில் மார்க்கத்திற்கு முரணான நிறைய காரியங்கள் நடைபெறுகிறது!

சில குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே பெற்றோரின் சொத்துக்களை எடுத்துக் கொள்கின்றனர். பெண்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. காரணம் கேட்டால், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போதே சீர்வரிசை, வரதட்சணை, நகை நட்டுக்கள் என அதிகமாகச் செலவு செய்து விட்டோம் என்று கூறி விடுகின்றனர். இது வரதட்சணை மற்றும் சீர்வரிசைகளின் தீய விளைவாகும்.

சிலர் தாயாரின் சொத்துக்கள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்றும், தந்தையின் சொத்துக்கள் ஆண் மக்களுக்கு உரியவை என்றும் யூகத்தின் அடிப்படையில் பிரித்து விடுகின்றனர்.

இன்னும் சிலர் தங்களுக்குப் பல பிள்ளைகள் இருப்பினும் தங்களின் மனதிற்குப் பிடித்த பெண் பிள்ளைக்கோ அல்லது ஆண் மகனுக்கோ தங்களின் சொத்து முழுவதையும் எழுதிவைத்து விட்டு மற்ற பிள்ளைகளுக்கு ஒன்றும் கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர்.

இவைகளனைத்தும் மார்க்கத்திற்கு முரணானவைகளாகும். இத்தகைய பழக்கங்களை விட்டொழிக்க வேண்டும்!

அல்லாஹ் கூறுகின்றான்:

“பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் உண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே, (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்.”  அல்குர் ஆன் 4:7

வாரிசுகள் யார்? அவர்களுக்குரிய பங்கு என்ன? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதன்படி பிரித்தளிப்பதும் அவசியம்.

அடுத்ததாக நம்மில் பல குடும்பங்களில் சொத்துக்குரியவர் இறந்து இரண்டு மூன்று தலைமுறையாக கூட அந்த சொத்துக்கள் பிரிக்கப்படாமல் இருப்பதைப் பார்க்கின்றோம்! இதுவும் மார்க்கத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்!

ஒருவர் இறந்து விட்டால் எவ்வளவு சீக்கிரம் அவருடைய சொத்தைப் பிரித்து இறந்தவரின் வாரிசுகளுக்கு கொடுக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்தாக வேண்டும்! அவ்வாறு பிரித்துக் கொடுக்காமல் அவற்றை ஒரு சிலரே அனுபவிப்பவது இறைக் கட்டளைக்கு மாற்றமானதும் தனக்கு உரிமையில்லாத ஒன்றை ஒருவர் அனுபவிப்பதுமாகும்.

உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்!

செல்வ செழிப்புள்ள ஒரு குடும்பத்தில் ஒருவர் பிறந்து வளர்ந்து பெரியவராகியிருக்கிறார். ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலையினால் அவருக்கு வறுமை நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் அவரின் மற்ற சகோதரர்கள் செல்வ நிலையில் வாழ்கின்றனர். இந்நிலையில் அவரின் தந்தை இறந்துவிட அவருடைய சொத்துக்களை முறையே இவருக்குப் பிரித்துக் கொடுக்கப்படுமானால் ஏழ்மை நிலையிலுள்ள இவர் அந்த பொருளாதாரத்தைக் கொண்டு தன் ஏழ்மையை ஓரளவிற்கு சரிசெய்து கொள்ள முடியும்!

ஆனால் நமதூரில் பெரும்பாலோனார் வீடுகளில் நடைபெறுவது என்னவெனில் இறந்தவரின் மனைவி உயிருடன் இருப்பதைக் காரணம் காட்டி இறந்தவரின் சொத்துக்களைப் பிரிப்பதில்லை! செல்வ செழிப்புடன் இருக்கும் மற்ற சகோதரர்களும் அவர்களுக்குத் தேவையில்லாதிருப்பதால் சொத்தை பிரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை!

ஏழ்மையில் இருக்கும் சகோதரருரம் நாம் சொத்தைப் பிரித்துக் கேட்டால் நம் குடும்ப பாரம்பரியம் கெட்டுவிடுமோ என அஞ்சி தனக்கு கிடைக்க வேண்டிய அந்த சொத்தின் மீது அதிக தேவையிருந்தும் அதைப் பற்றி வாய் திறக்காமல் மௌனமாக இருந்து ஏழ்மையுடன் சிரமப்படுவதைக் காண்கிறோம்!

இவ்வாறு இஸ்லாம் கூறும் நெறிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு குடும்ப பாரம்பரியம் கெட்டுவிடும் என்ற பெயரில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக கூட சொத்துக்களைப் பிரிக்காமல் இருந்து அந்த சொத்துக்கள் பல வாரிசுதாரர்களுக்கிடைய பிரச்சனைக்குரிதாக மாறியிருப்பதைக் கண்கூடாக காணலாம்.

இது ஏழ்மை நிலையில் இருக்கும் அந்த வாரிசுதாரருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்! அவருக்கு சேரவேண்டிய அல்லது அவருக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு சேரவேண்டிய சொத்துக்களை அவர்களுக்கு சேரவிடாமல் தடுத்த மாபெரும் குற்றம் அந்த சொத்தைப் பிரிக்காமல் வைத்திருந்தவர்களையே சேரும்! மேலும் அத்துடன் தங்களுக்கு உரிமையில்லாத சொத்தை அனுபவித்த பாவம் கூட அந்த சொத்துக்கள் யார் பொறுப்பில் இருந்தனவோ அவர்களை சேரும்! குடும்ப பாரம்பரிய காரணம் கூறி சொத்துக்களை பிரிக்கவிடாமல் செய்த மற்ற சகோதரர்களும் இந்த பாவத்தில் பங்குதாரர்களாவார்கள்!

இது விளையாட்டல்ல! இறைவனின் கட்டளை! இறைக் கட்டளையை மீறிய குற்றமும் அதன் மூலம் மறுமையில கடும் தண்டனையையும் பெற நேரிடும்!

நான் மேலே கூறியது சிறிய உதாரணம் தான்!

இது போல பல குடும்பங்களில் சொத்துக்களைப் பிரிக்காததால் ஏழ்மை நிலையிலுள்ள வாரிசுகள் தங்களின் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கும் அல்லது அவர்களின் திருமண மற்றும் மருத்துவ செலவிற்கும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்ற சூழலில் மரணித்த தங்களின் பெற்றோர் மூலமாக வாரிசு சொத்து அவர்களுக்கு கிடைக்குமானால் அது அவர்களுடைய சிரமமான சூழலிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்பதை சொல்லித் தெரிவதில்லை! தங்களுக்கு உரிமையானதை தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அது அவர்களுக்கு கிடைக்கச் செய்வது தான் முறையானதும் இறைவனின் உவப்பைப் பெற்றுத் தருவதுமாகும்!

சிந்திப்போம்! சீர்திருந்துவோம்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *