வாரிசுகள் பலர் இருக்க குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும் தம் சொத்துக்களை ஹிப்பத் எனும் பத்திரப் பதிவு செய்து கொடுக்கலாமா?

முழுமை பெற்ற இஸ்லாம் மார்க்கத்திலே ஒருவரின் மரணத்திற்குப் பிறகு அவரின் சொத்துக்கள் எவ்வாறு பங்கிடப்பட வேண்டும் என அல்-குர்ஆனும் நபிமொழியும் தெளிவாக விளக்கியிருக்கிறது!

அல்லாஹ்வையும் அவனது தூதர் (ஸல்) அவர்களையும் உண்மையிலேயே ஒருவர் ஈமான் கொண்டிருந்தால் அல்-குர்ஆனில் கூறப்படும் சட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் அருளப்பட்ட சட்டங்கள் தான் எனவும் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறியோருக்கு  மறுமையில் கடும் தண்டனைகள் கிடைக்கும் என்பதை உறுதியாக நம்பினால் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக எந்த ஒரு துரும்பையும் அசைக்க மாட்டார்! இதில் சந்தேகம் உடையவர்களும் சைத்தானின் ஊசலாட்டத்திற்கு அடிபணிந்தவர்களும் தான் அல்லாஹ்வின் கட்டளைகளை உதாசீனப்படுத்திவிட்டு மனம் போன போக்கில் செயல்படுவர்!

தங்களை முஸ்லிம் எனக் கூறிக்கொண்டு மார்க்க கடமைகளை சரிவர செய்துவரும் முஸ்லிம்களில் பலர் கூட பாகப்பிரிவினை என்ற விசயத்தில் தடம்புரண்டு அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறுசெய்து பாவியாகிவிடுகின்றனர்.

ஆம் இங்கு தான் சைத்தான் முஸ்லிம்களை பிரியம் அல்லது பாசம் என்பதன் மூலம் தன் வலையில் வீழ்த்தி அவர்களை நரகத்தின் படுகுழியில் விழ வழிவகை செய்கின்றான்.

சைத்தானின் மாய வலையில் சிக்கிய நம் மக்களில் பலர் தங்களின் பிள்ளைகளில் சிலரின் மீது அதீத பாசத்தையும் சிலரின் மீது வெறுப்பையும் காட்டி குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அல்லது ஒருவருக்கு மட்டும் முழு சொத்தையும் அல்லது மிக அதிகமானதை ஹிப்பத் என்ற முறையில் பங்கிட்டு மற்றவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் அல்லது மிக குறைந்த அளவில் கிடைக்குமாறு செய்கின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் இறைவன் தன் திருமறையில் அருளிய பாகப்பிரிவினை சட்டங்களையெல்லாம் கேலிக் கூத்தாக்கி அவற்றைக் காற்றில் பறக்கவிடுகின்றனர்!

இறைச் சட்டங்களை புறக்கணித்த இவர்களும் மறுமையில் அல்லாஹ்வினால் புறக்கணிக்கப்பட்டு நரகத்தில் வீசியெறியப்படுவர் என்பதையும் நினைவில் வையுங்கள்!

நம்முடைய வாரிசுகளில் நமக்கு உண்மையிலேயே நன்மை பயப்பவர் யார்? என்பதை நம்மைவிட நம்மையும் நம் வாரிசுகளையும் படைத்த இறைவனே நன்கறிவான்!

அல்லாஹ் கூறுகின்றான்:

“இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 4:11)

இவ்வாறு தன்னுடைய மற்ற வாரிசுகளுக்கு பாதகம் ஏற்படும் அளவிற்கு குறிப்பிட்ட ஒரு வாரிசுக்கு மட்டும் அன்பளிப்பு என்ற அடிப்படையில் தன் சொத்துக்களை வழங்குவதற்கு மார்க்கத்தில் தடையிருக்கிறது என்பதை நம் மக்கள் உணராதிருப்பதுவே இத்தகைய பாவமான காரியத்தை செய்வதற்கு காரணமாகிறது என்றால் அது மிகையாகாது!

நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது:

“என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.”

ஆதாரம்: புகாரி. (2586)

மேற்கண்ட ஹதீஸ், மற்ற பிள்ளைகளுக்கு ஒன்றும் கிடைக்காமல் ஒருவருக்கே சொத்தை அன்பளிப்பு (ஹிப்பத்) என்ற பெயரில் பத்திரப்பதிவு செய்யும் முஸ்லிம்களின்  செயலை தடுக்கிறது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்!

எனவே முஸ்லிம்கள் இந்த விசயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு இறைக் கட்டளைகளுக்கு மாறு செய்யாத விதத்திலும் அனைத்து பிள்ளைகளையும் சமமாக பாவிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்!

பாகப்பிரிவனை சம்பந்தமாக இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதல்களை காட்டியிருக்கும் போது நம் வாரிசுகளுக்கு “நான் இறந்த பிறகு என் சொத்துக்களை இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின்படி பிரித்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறுவது தான் சால சிறந்தது!

யாருக்கு எப்போது மரணம் வரும் என்று தெரியாத சூழலில் ஒரு வேளை நாம் யாருக்கு சொத்து எழுதி வைத்தோமோ அவர் கூட நமக்கு முன்னதாக இறக்கவும் நேரிடும் என்பதையும் மறக்க வேண்டாம்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *