குர்பானி பிராணியை அறுப்பதன் ஒழுங்குகள்

குர்பானி பிராணிகளை எங்கு வைத்து அறுக்க வேண்டும்?

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெருநாள்) தொழும் திடலிலேயே குர்பானிப் பிராணிகளை அறுப்பவர்களாக இருந்தார்கள்.”

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); ஆதாரம்: புகாரி 5552

குர்பானி பிராணிகளை வீட்டில் வைத்து கொடுப்பதற்கும் அனுமதி உள்ளது.

பராஉ இப்னு ஆஸிப் (ரலி) கூறினார்:

“(ஈதுல் அள்ஹா பெருநாள் உரையில்) நபி(ஸல்) அவர்கள், ‘இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு (தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே (குர்பானிப் பிராணியை) அறுக்கிறவருக்கு அது, தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 5545

குர்பானி பிராணிகளை கூர்மையான கத்தியைக் கொண்டு அறுக்க வேண்டும்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பிராணிகளை அறுத்தால் அழகிய முறையில் அறுங்கள். உங்கள் கத்தியை நீங்கள் கூர்மையாக்கிக் கொள்ளுங்கள்! (விரைவாக) அறுப்பதன் மூலம் அதற்கு நிம்மதியைக் கொடுங்கள்.”

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி); இப்னுமாஜா 3170

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தியை எடு” என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு” என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.”

ஆதாரம்: முஸ்லிம் 3977

அறுப்பதற்கு தயாராவதற்கு முன்னரே கத்தியை தீட்டி வைத்திருக்க வேண்டும்:

“ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அவரிடம்), ‘இப்பிராணியைப் பலமுறை கொல்வதை நீ நாடுகிறாயா? இதை நீ படுக்க வைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா?’ என்று கூறினார்கள்.”

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257

குர்பானி கொடுப்பவர் அறுப்பது தான் சிறந்தது:

குர்பானி கொடுப்பவர் தமது கைகளினாலேயே அறுப்பது சிறந்தது. காரணம் நபி (ஸல்) அவர்கள் தங்களின் கரத்தாலேயே குர்பானி பிராணிகளை அறுத்தார்கள்.

“இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கொம்புகள் உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக கடாக்கள் பக்கம் சென்று தம் கரத்தால் அவற்றை அறுத்தார்கள்.”

அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி); ஆதாரம்: புகாரி 5554

இயலாதவர்கள் பிறர் மூலம் அறுப்பதில் தவறு இல்லை! ஆயினும் இயன்றவரை தாமே அறுக்க முயற்சிப்பது தான் நல்லது.

குர்பானி பிராணியை அறுக்கும் முறை:

குர்பானி கொடுப்பதற்காக அறுக்கும் போது ஆடு, மாடுகளை ஒரு பக்கம் படுக்கவைத்தும் ஒட்டகத்தை நிற்க வைத்தும் கூர்மையான கத்தியைக் கொண்டு அறுக்க வேண்டும்.

“நபி (ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5558

“நபி (ஸல்) அவர்கள் ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்துத் தம் கையாலேயே அறுத்தார்கள். மேலும் அவர்கள் மதீனாவில், பெரிய கொம்புகளையுடைய, கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகள் இரண்டையும் குர்பானி கொடுத்தார்கள்.”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 1712

‘இப்னு உமர்(ரலி), அறுப்பதற்காகத் தம் ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த ஒருவரிடம் வந்து, ‘அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக! அதுவே முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறை!’ என்று கூறியதை பார்த்தேன்.’

அறிவிப்பவர்: ஸியாத் இப்னு ஜுபைர் (ரலி); புகாரி 1713

குர்பானி பிராணிகளை அறுக்கும் போது என்ன கூறவேண்டும்?

“நபி (ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.”

அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்: புகாரி 5565

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள்,வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தியை எடு” என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு” என்றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.

பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) “பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்மதின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்” (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந்தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)” என்று கூறி, அதை அறுத்தார்கள்.

ஆதாரம்: முஸ்லிம் 3977

மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் விளங்குவது:

1) குர்பானி பிராணியை பெருநாள் தொழுகை நடந்த திடலிலோ அல்லது வீட்டிலோ அறுத்துப் பலியிடலாம். சில நாடுகளில், பொதுவெளியில் அல்லது வீடுகளில் பிராணிகளை அறுப்பதற்கு தடையிருப்பின் அதற்கென அரசு அமைத்திருக்கும் இடங்களில் அவற்றை அறுக்கலாம்.

2) குர்பானி கொடுப்பவரே அறுப்பது தான் சிறந்தது. இயலாதவர்கள் பிறரை வைத்தும் அறுக்கலாம்.

3) குர்பானி பிராணியை அறுப்பதற்காக தரையில் கிடத்துவற்கு முன்னரே கத்தியை தீட்டி கூர்மையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

4) குர்பானி பிராணிகளை கூர்மையான கத்தியைக் கொண்டு தான் அறுக்க வேண்டும்.

5) குர்பானி கொடுப்பதற்காக அறுக்கும் போது ஆடு, மாடுகளை ஒரு பக்கம் படுக்கவைத்தும் ஒட்டகத்தை நிற்க வைத்தும் அறுக்க வேண்டும்.

6) குர்பானி பிராணிகளை அறுக்கும் போது, “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” (அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன், அல்லாஹ் பெரியவன்) என்று கூற வேண்டும். அத்துடன் இந்த குர்பானி எனும் வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுமாறு இறைவனிடம் துஆச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் அஃலம்

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *