பாவங்கள் பலசெய்த பாவிகளின் பாவமன்னிப்பு

கடந்த காலங்களில் எத்தகைய செயல்களைச் செய்திருந்தாலும் அல்லாஹ்விடம் நேர்மையாக ‘தௌபா’ செய்து பாவமன்னிப்புக் கோரினால் மிகப்பெரும் பாவமான இறைவனுக்கு இணைவைக்கும் ‘ஷிர்க்’ போன்ற பாவங்கள் உட்பட அனைத்தையும் மனந்திரும்பிய முஃமின்களுக்கு மன்னிப்பதாக அல்குர்ஆனில் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

அதுமட்டுமின்றி, இறைவன் மிகவும் கருணையும் பெருந்தன்மையும் கொண்டவன்! அப்படிப்பட்ட மனந்திரும்பிய விசுவாசிகளின் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் செய்த தீய செயல்களை யும் கூட நற்செயல்களாக மாற்று கின்றான்!!

இரக்கமுள்ள இறைவனிடமிருந்து நேர்மையான தௌபா அல்லது மனந்திரும்புதலைத் தேடுவதற்கான நிபந்தனைகள் அல்லது வழிமுறைகள்:

  1. ஒருவர் தான் பாவம் செய்துவிட்டதை அறிந்து தான் செய்த பாவத்திற்காக வருந்தி வெட்கப்படுவது!
  2. அந்த பாவத்தை மீண்டும் செய்ய மா ட்டேன் என்று அல்லாஹ்விடம் ஒரு உறுதியான உடன்படிக்கை செய்து வாக்குறுதி அளிப்பது!
  3. தன் மரணத்திற்கு முன்பாகவே அல்லாஹ்விடம் திரும்பி மன்னிப்பு தேடுவது!
  4. ஒரு முஃமின் அதன் பிறகு நீதியான நற்செயல்களைச் செய்து வருவது!

அல்லாஹ் திருக்குர்ஆன் அத்தியாயம் 39 சூரா ஜூமர், வசனங்கள் 53-54 ல் கூறுகிறான்:

‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக!

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள் உங்கள் இறைவன் பால் திரும்பி அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.

அல்லாஹ் திருக்குர்ஆன் அத்தியாயம் 3 சூரா ஆலே இம்ரான் வசனம் 135-136 ல் கூறுகிறான்:

தவிர மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும் அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.

அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.

அல்லாஹ் திருக்குர்ஆன் அத்தியாயம் 25 சூரா ஃபுர்கான் வசனங்கள் 63-71 இல் கூறுகிறான்:

இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ‘ஸலாம்’ (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள். இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள். ‘எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக; நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்’ என்று கூறுவார்கள். நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும். இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் – எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள்.

ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும். கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர். ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத்தேடியவராவார்.

அல்லாஹ் திருக்குர்ஆன் அத்தியாயம் 6 சூரா ஆனாம் வசனம் 54 ல் கூறுகிறான்:

நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே!) நீர் கூறும்இ உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

திர்மிதீ, ஹதீஸ் எண்: 2357, அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பாவத்திற்காக வருந்துபவர் பாவம் செய்யாதவனைப் போன்றவர் ஆவார்.’

திர்மிதீ, ஹதீஸ் எண்: 2338, அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ் ஒரு அடியானின் மனந்திரும்புதலை (தௌபாவை) அவன் மரணிக்கும் வரை ஏற்றுக்கொள்கிறான்.’

திர்மிதீ, ஹதீஸ் எண்: 2339, அபு சைது (ரலி) அறிவிக்கிறார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஷைத்தான் கூறினான், ‘உன் வல்லமையின் மீது ஆணையாக, என் இறைவா! உமது அடியார்களின் உயிர் அவர்களின் உடலில் இருக்கும் வரை நான் அவர்களை வழிகெடுப்பேன்!’ மகத்துவமும் மகிமையுமான இறைவன் பதிலளித்தான், ‘என் வல்லமை, மகிமை மூலம் அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை நான் அவர்களை மன்னித்துக்கொண்டே இருப்பேன்!’

முஸ்லிம், ஹதீஸ் எண்: 5215, அபூதர் அல் கிபாரி ( ரலி) அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: ஒரு நன்மை செய்தவருக்கு அதைப் போன்ற பத்து மடங்கு நற்பலன்கள் உண்டு. அதைவிடக் கூடுதலாகவும் நான் வழங்குவேன். ஒரு தீமையைச் செய்தவருக்கு அதைப் போன்ற ஒரு தீமையே (குற்றமே) உண்டு. அல்லது (அவரை) நான் மன்னித்துவிடுவேன்.

யார் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறாரோ நான் அவரிடம் (விரிந்த) இரு கைகளின் நீட்டளவுக்கு நெருங்குகிறேன். யார் என்னிடம் நடந்து வருகிறாரோ நான் அவரிடம் ஓடிச்செல்கிறேன். ஒருவர் எதையும் எனக்கு இணை வைக்காமால் பூமி நிறைய (சிறு) பாவங்களுடன் என்னிடம் வந்தாலும் அதைப் போன்று (பூமி நிறைய) மன்னிப்புடன் நான் அவரை எதிர்கொள்கிறேன்.

எனவே அன்பு சகோதர, சகோதரிகளே! நாம் பாவங்கள் பல செய்த பாவிகளாக இருக்கிறோம்! நமது பாவங்கள் எங்கே மன்னிக்கபடப்போகின்றது என்று நிராசையடையாமல் கருணையாளனாகிய அல்லாஹ்வின்பால் முற்றிலுமாகத்திரும்பி அவனிடம் நமது பாங்களை மன்னிக்கக்கோருவோம்!

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

By சகோதரர் M. அன்வர்தீன்

வசிப்பிடம் :அல்-கப்ஜி, சவூதி அரேபியா; தாயகம்: புது ஆத்தூர், தமிழ் நாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed