புனித மக்கா பூமியின் கண்ணியமும் சிறப்பும்:

மக்காவில் அமைந்துள்ள அந்தப் புனிதமான இடம் குறித்து புனித அல்குர்ஆன்:

“அவர்களைச் சுற்றிலும் உள்ள மனிதர்கள் (பகைவர்களால்) அடித்துச் செல்லப்படும் நிலையில், (இந்த மக்காவை) நாம் பாதுகாப்பான புனித இடமாக ஆக்கியுள்ளதை அவர்கள் பார்க்கவில்லையா? பொய்யானதை நம்பி, அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?” (அல்குர்ஆன் 29:67).

“இந்த நகரத்தை எவன் புனிதமாக்கினானோ அந்த அல்லாஹ்வை வணங்குமாறு தான் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எல்லாமே அவனுக்கே உரியவை. மேலும், முற்றிலும் கீழ்ப்படிந்த (முஸ்லிமான) ஒருவராக இருக்குமாறும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.” (அல்குர்ஆன் 27:91).

“நாம் இந்த ஆலயத்தை (கஅபாவை) மனிதர்களின் ஒன்று சேருமிடமாகவும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கி, இப்ராஹீம் நின்ற இடத்தை (மகாமு இப்ராஹீமை) தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டதை எண்ணிப் பாருங்கள். மேலும், எனது இந்த ஆலயத்தை தவாஃப் (வலம்) செய்பவர்களுக்காகவும், இஃதிகாஃப் இருப்பவர்களுக்காகவும், ருகூஃ, ஸஜ்தா செய்து தொழுபவர்களுக்காகவும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் வலியுறுத்தினோம்.” (அல்குர்ஆன் 2:125).

“மனிதர்களுக்காக (வழிபாட்டிற்காக) அமைக்கப்பட்ட முதல் ஆலயம் நிச்சயமாக பக்கா (மக்கா) வில் உள்ளதேயாகும். அது பாக்கியம் பெற்றதாகவும், அகிலத்தாருக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகளும், ‘மகாமு இப்ராஹீம்’ (இப்ராஹீம் நின்ற இடம்) உள்ளது. அதில் யார் நுழைகிறாரோ அவர் அபயமளிக்கப்பட்டவராகி விடுகிறார்.” (அல்குர்ஆன் 3:196, 197).

“எங்கள் இறைவனே! நான் எனது சந்ததியினரில் ஒரு பகுதியை, எவ்வித விவசாயமும் இல்லாத பள்ளத்தாக்கில், உனது புனித ஆலயத்தின் (கஅபாவின்) அருகே குடியேற்றியுள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காகவே (இவ்வாறு செய்தேன்). எனவே மனிதர்களில் சிலரின் உள்ளங்களை இவர்கள்பால் ஈர்க்கப்பட்டவையாக ஆக்குவாயாக! மேலும், இவர்கள் நன்றி செலுத்துவதற்காக இவர்களுக்குப் பலவகையான கனிவர்க்கங்களையும் உணவாக வழங்குவாயாக.” (அல்குர்ஆன் 14:37).

மக்காவில் அமைந்துள்ள அந்தப் புனிதமான இடம் குறித்து நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள்:

“ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிய பின், ‘மக்காவைப் புனிதமாக்கியது அல்லாஹ் தான், அதனைப் புனிதமாக்கியது மனிதர்கள் அல்ல. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்ட எவருக்கும் இங்கு இரத்தம் சிந்துவதோ, இங்குள்ள மரங்கள், செடிகளை வெட்டுவதோ ஆகுமானதல்ல. அல்லாஹ்வின் தூதர் இங்கு போரிட்டதை யாராவது பொதுவான அனுமதியாகக் கருதினால், அல்லாஹ் தனது தூதருக்கு மட்டுமே அந்த அனுமதியை வழங்கினான், உங்களுக்கு அல்ல என்று கூறுங்கள். எனக்கும் பகலின் ஒரு சிறு நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இன்று அதன் புனிதத்தன்மை நேற்று அதன் புனிதத்தன்மை இருந்ததைப் போலவே (திரும்பி) வந்துவிட்டது. இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இதனைத் தெரிவிக்கட்டும்’ என்று கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரி).

“நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியடைந்த நாளில் (மக்களிடையே) எழுந்து நின்று, ‘அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளன்றே மக்காவைப் புனிதமாக்கினான். அல்லாஹ் அதனைப் புனிதமாக்கியது இறுதி நாள் வரை அப்படியே நீடிக்கும். எனக்கு முன் எவருக்கும் இங்கு போரிட அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறே எனக்குப் பின்னரும் எவருக்கும் அனுமதி இல்லை. எனக்கும் (மக்காவை வெற்றி கொண்ட இந்தச் சந்தர்ப்பத்தில்) ஒரு சிறு நேரம் மட்டுமே போரிட அனுமதி வழங்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது, இங்குள்ள மரங்களை வெட்டுவதோ சிறிய செடிகளைப் பிடுங்குவதோ தடைசெய்யப்பட்டுள்ளது, ஒருவரின் தொலைந்து போன பொருளை அதனை அறிவிப்பவரைத் தவிர வேறு எவரும் எடுக்கக் கூடாது’ என்று கூறினார்கள். அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள் எழுந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது கொல்லர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகிறது’ என்று கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருந்துவிட்டு, பின்னர் ‘இத்கிர் புல்லைத் தவிர’ என்று கூறி, அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரி).

About The Author

By மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி

அழைப்பாளர், அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கோபார், சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *