குர்பானி எனும் உன்னத வணக்கத்தை நிறைவேற்றுவோம்

குர்பானியின் வரலாற்றுப் பின்னனி:

குர்பானி என்பது அல்லாஹ்வுக்காகவே செய்யப்படும் வணக்கங்களில் பிரதான ஒன்றாகும். இப்ராஹீம் நபி மற்றும் இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாக வரலாற்றை நினைவுபடுத்தும் குர்பானியின் பின்னனியைப் பற்றி திருமறையின் கூற்றைப் பார்ப்போம்.

“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்:

“என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!”

(மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”

ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது; நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்: “ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!

இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (அல்-குர்ஆன் 37:111)

தியாகச் செம்மல்களான இப்ராஹீம் நபி மற்றும் இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை நினைவு கூறும் முகமாக தியாகத் திருநாளான ஈதுல் அல்ஹாவின் போது குர்பானி என்ற இந்த வணக்கத்தை வருடந்தோறும் நிறைவேற்றி வருகின்றனர்.

குர்பானி அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய ஓர் வணக்கம்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (அல்-குர்ஆன் 108:2)

மேலும், குர்பானி எனப்படும் அறுத்துப் பலியிடும் வணக்கத்தை தனக்காக மட்டும் நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் தனது திருமறையில் வலியிறுத்தியிருக்கின்றான்.

“நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.” (அல்-குர்ஆன் 6:162)

அல்லாஹ்வுக்காகவே மட்டும் செய்யப்பட வேண்டிய குர்பானியை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்தால் அது இணைவைப்பாகும்:

அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யவேண்டிய குர்பானி எனும் இந்த வணக்கத்தை அல்லாஹ் அல்லாத அவுலியாக்களுக்கோ அல்லது ஜின்களுக்கோ செய்வது ஷிர்க் எனப்படும் மாபெரும் பாவமாகும்.

முஸ்லிம்களில் போதிய மார்க்க அறிவில்லாதவர்களில் சிலர் தர்ஹாக்களில் அடக்கமாகியிருப்பதாக நம்பப்படும் இறை நேசர்களுக்காகவும் இன்னும் சிலர் புதிய வீட்டைக் கட்டியவுடன் அதில் இருந்த ஜின்கள் தங்களுக்கு எவ்வித கெடுதியையும் தராமலிப்பதற்காக அவற்றைத் திருப்திப்படுத்தும் வகையில் அந்த ஜின்களுக்காகவும் ஆடு அல்லது கோழி போன்றவற்றை அறுத்துப் பலியிடுகின்றனர்.

இவ்வாறு அல்லாஹ் அல்லாமல் மற்றவர்களுக்காக அறுத்துப்பலியிடுபவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்த மாபெரும் குற்றத்தைச் செய்வதோடல்லாமல் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சாபத்திற்கும் உள்ளாகின்றார்கள்.

“அல்லாஹ் அல்லாதவருக்காக அறுத்துப்பலியிட்டவனை அல்லாஹ் சபிப்பானாக”

அறிவிப்பவர்: அலி (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

எனவே, குர்பானி என்பது அல்லாஹ் ஒருவனுக்கே நிறைவேற்ற வேண்டிய ஒரு வணக்கமாகும் என்பதை நன்கு நினைவில் கொள்ள வேண்டும.

குர்பானியின் நோக்கம்:

குர்பானி கொடுக்க நினைப்பவர் தன்னுடைய எண்ணங்களைத் தூய்மையாக்கிக் கொள்வது மிக மிக அவசியம்! இதுவும் ஒரு வணக்கமாதலால் அல்லாஹ்வுக்காகவே இந்த குர்பானியை நிறைவேற்றுகிறேன் என்ற துய இக்லாசுடன் செய்ய வேண்டும்.

மாறாக, ஒருவர், தாம் வாழும் சமூகத்தில் தன் செல்வ செழிப்பைப் பறைசாற்றும் விதமாகவோ தன் அந்தஸ்த்தை நிலை நிறுத்தவோ, பெருமைக்காகவோ இந்த குர்பானியை செய்தால் அவற்றுக்கு எவ்வித பலனும் கிடைக்காமல் போவது மட்டுமின்றி மறைமுக ஷிர்க் (ரியா) என்ற இணைவைப்பைச் செய்த குற்றமும் வந்து சேரும்.

குர்பானியின் நோக்கமாக அல்லாஹ் கூறுகின்றான்:

“குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!” (அல்-குர்ஆன் 22:37)

எனவே, இறையச்சத்துடன் கூடிய தூய இக்லாசோடு இந்த குர்பானி எனும் வணக்கத்தை நாம் நிறைவேற்ற வேண்டும்.

About The Author

மற்றவர்களுக்கு அனுப்ப...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *